புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (18:14 IST)

நெட்பிலிக்ஸ்: நிதி பிரச்சனையை தீர்க்க இந்தியாவை பயன்படுத்துகிறதா?

மிக மலிவான சந்தா திட்டத்தை நெட்பிலிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது - இந்திய பயனாளர்களுக்கான செல்போனுக்கு மட்டுமான சேவை இது. அந்த நிறுவனத்தின் நிதிச் சிக்கல்களுக்கு இந்தியாவில் தீர்வு கிடைக்குமா என்பது பற்றி பிபிசியின் ஜோ மில்லர் விடை தேடியிருக்கிறார்.

தன்னுடைய 20 ஆண்டுகால பொழுதுபோக்குப் பிரிவு செய்தியாளர் அனுபவத்தில், நூற்றுக்கணக்கான பாலிவுட் நட்சத்திரங்கள் இந்தியாவில் பிரமாண்டமான திரைத் துறை மற்றும் தொலைக்காட்சி நேயர்களின் கவனத்தை ஈர்க்க கடும் போட்டியில் ஈடுபட்டதை ரோஹித் கில்னானி கண்டிருக்கிறார்.

ஆனால் 2017ல் மும்பை ஓட்டல் ஒன்றில் பிராட் பிட் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்றது, தங்கள் காரியம் நடப்பதற்கு முக்கியத்துவம் தருவதில் அமெரிக்கா தீவிரமாக இருக்கிறது என்பதை அவருக்கு உணர்த்தியது.

இந்தியாவில் ஒரு திரைப்படத்தை பிரபலப்படுத்துவதற்கு - நடிகரே நேரில் வரும்- வகையில் தோன்றிய முதலாவது அமெரிக்க நட்சத்திரம் பிராட் பிட் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து கிறிஸ்டியன் பாலே, வில் ஸ்மித் ஆகியோரும் இதே பாணியைப் பின்பற்றினர். விநோதமாக, அவர்கள் வார்னர் பிரதர்ஸ் அல்லது சோனி போன்ற பெரிய ஸ்டூடியோக்களின் தூதர்களாக வரவில்லை. மாறாக, புதிய ஊடக ஜாம்பவான் - நெட்பிலிக்ஸ் - நிறுவனத்தின் சார்பாக வந்திருந்தனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில் ஆர்வமிக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது. அமெரிக்காவில், வீடுகளுக்கான இணைப்பு சேவையில் இந்த நிறுவனம் கடந்த வாரம் 126,000 வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக அறிவித்திருப்பது கூர்மையாக கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை விலை சரிந்ததை அடுத்து, இந்தியாவில் செல்போன்களுக்கு மட்டுமான, மலிவான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. ஒரு மாதத்துக்கு 199 ரூபாய் ($2.8; £2.2) என்ற கட்டணத்தில் அறிவிக்கப் பட்டுள்ள திட்டம் இந்தியாவில் வரவேற்பைப் பெறும் என்று தலைமை செயல் அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ் கூறியுள்ளார். நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் ``அடுத்த 100 மில்லியன்'' சந்தாதாரர்களாக அவர்கள் இருக்கக் கூடும் என்று அரைகுறை நம்பிக்கையுடன் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, Sacred Games, Chopsticks மற்றும் Lust Stories போன்ற ஒரிஜினலான தலைப்புகளில் படங்கள் எடுத்தாலும், இந்தியாவில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் பங்கு சிறியதாகவே உள்ளது.

1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், இந்த நிறுவனத்துக்கு 4 முதல் 6 மில்லியன் வரையிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்தியாவைச் சேர்ந்த ஹாட்ஸ்டார் நிறுவனம் (டிஸ்னி நிறுவனத்துக்குச் சொந்தமானது) 300 மில்லியன் மாதாந்திர பயனாளர்கள் இருப்பதாகக் கூறியுள்ளது என்று ரெட்சீர் என்ற ஆலோசனை நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவானது ``கட்டணத்தை முக்கியமாகக் கருதும் சந்தை'' என்று PwC இந்தியா என்ற ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரர் ரஜிப் பாசு கூறுகிறார். ``மிகவும் கல்வி கற்ற, சமாதானம் செய்யக் கூடிய இந்திய நுகர்வோர்கள், சில சர்வதேச படங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இந்திய பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களை விரும்புபவர்களை'' இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டு செயல்பட்டது.

கேபிள் இணைப்புகளையும், செல்போன் இன்டர்நெட் இணைப்புகளையும் மிகவும் குறைந்த கட்டணத்தில் அளிக்கும் ஒரு நாட்டில், மலிவான சந்தாக்களுக்கு தள்ளுபடிகள் குறித்து விளம்பரம் செய்யும் சூழ்நிலையில், அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் தனித்து நிற்கவும், அதிக கட்டணத்திலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருந்தது.

இதற்கு மாறாக ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன. அமேசான் நிறுவனம் அதனுடைய பிரைம் சந்தாவுடன் சேர்த்து ஹாட்ஸ்டார் சேவையை இலவசமாக வழங்கியது. ஒரு டஜனுக்கும் மேலான சிறிய நிறுவனங்கள், செல்போன் சேவையுடன் இணைந்த சேவை வழங்கும் சிறப்பு சேவையாளர்களும் களத்தில் உள்ளன.

ஆனால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போல அல்லாமல், இந்தியாவின் சந்தை மிதமிஞ்சிய நிலையில் இல்லை. ஒரிஜினல் தயாரிப்புகளை முழுமையாக வழங்க முடியாத நிலையில் உள்ள இந்தியச் சந்தையில், மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிக வரவேற்பு காத்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் சந்தா சந்தை 262 சதவீதம் வளர்ந்திருக்கிறது, அதாவது 14.2 பில்லியன் ரூபாய் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று இ.ஒய். என்ற ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. விடியோ தளங்களில் பதிவு செய்ததன் மூலம் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக இ.ஒய். கண்டறிந்துள்ளது. 5 ஜி அலைக்கற்றை இணைப்பு வருவதை ஒட்டி இந்தப் போக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

புதிதாக சேவை அளிக்க வரும் நிறுவனங்களுக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியர்கள் ஒரு நாளில் சராசரியாக 4.6 மணி நேரம் மட்டுமே ஊடகத்தில் (அச்சு, தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் உள்பட) செலவிடுகிறார்கள் என்று பி.சி.ஜி. என்ற ஆலோசனை நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அமெரிக்கர்கள் தினமும் சராசரியாக 11.8 மணி நேரத்தை இதில் செலவிடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, இந்தியர்களின் பயன்பாட்டு நேரம் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த நேரத்தை அதிகரிக்கச் செய்வதற்கு நெட்பிலிக்ஸ் மற்றும் அதன் போட்டி நிறுவனங்களுக்கு உள்ள முக்கியமான வழி, ``இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் சேவையை அளிக்க வேண்டும்'' என்பதாக இருக்கும் என்று PwC-யின் பாசு கூறுகிறார். அதிவேக பிராண்ட்பேண்ட் மற்றும் அதிவேக கேபிள் டி.வி. இணைப்புகள் இல்லாத இடங்களிலும் கூட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன என்று அவர் விளக்குகிறார்.

``தற்போதுள்ள சந்தையில் நீடிப்பதன் மூலம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் தங்களுடைய விரிவாக்க இலக்கை எட்டுமா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

``அந்த நிறுவனம் Sacred Games போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க வேண்டும்.''

``அவர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களை அடைய வேண்டியிருக்கும்'' என்று என்.டி.டி.வி. செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரியும் ரோஹித் கில்னானி கூறுகிறார். அதுவும் செல்போனில் பயன்படுத்தும் சந்தாவாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

ஆனால் அந்தப் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள், குறைந்த செலவு செய்யும் சூழ்நிலையில் வாழ்பவர்கள். அவர்களுடைய செல்போன்களில் தகவல் சேமிப்பு அளவு குறைவாகத்தான் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட சேவைகளை அவர்கள் விரும்புவது சந்தேகமே. எனவே ``சிறந்த சேவையாளர் மட்டுமே தாக்குபிடிக்க முடியும்'' என்று அவர் கூறுகிறார்.

ஒழுங்குமுறைகள் காரணமாக நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான திட்டங்கள் அடிபட்டுப் போகவும் கூடும். தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் அறிவித்திருப்பதை இந்த நிறுவனம் கவனித்திருக்கும். நேரடி ஒளிபரப்பாக பெறக் கூடிய சந்தையில் நுழைவதாக இருந்தால், பார்க்கும் நேரத்துக்கு மட்டும் கட்டணம் என்றால், மாதாந்திர திட்டங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை குறைந்த அளவு கட்டணத்தில் பல தளங்களில் வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் சேவை அளிக்க வேண்டியது அவசியமாக இருக்கும்.

 
நெட்பிலிக்ஸ் நிறுவனம் செலவிடும் போக்கை வைத்துப் பார்த்தால், சந்தையில் தாக்குபிடிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறுவதில், அந்த நிறுவனம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில் அந்த நிறுவனத்தின் முதலீடு வேகமாக அதிகரித்துள்ளது. 13 புதிய படங்களும், 9 புதிய ஒரிஜினல் தொடர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நாடகம், பயங்கரம் மற்றும் காமெடி அம்சங்களுடன் கூடிய கலவையாக இந்தத் தொடர்கள் மற்றும் படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஷாருக்கான் போன்ற பெரிய பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து இது நடைபெறுகிறது. Sacred Games திரில்லர் தொடர்கள் மற்றும் அமேசானின் Inside Edge என்ற கிரிக்கெட் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் நேயர்களை ஈர்க்கக் கூடியவையாக அவை இருக்கும்.

இந்தியாவில் ஹிட் ஆகும் தொடர்கள், படங்களை தயாரிப்பது - அமெரிக்காவில் தயாரிப்பதைவிட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அது வெற்றி பெறுமானால், டிஸ்னி, ஆப்பிள் மற்றும் தாயகத்தில் எச்.பி.ஓ. போன்ற அப்போதைக்கு நேரலையில் பார்க்கும் சந்தைப் போட்டியில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு அது உதவிகரமாக அமையும்.

ஆனாலும் அந்தத் திமிங்கலங்கள், இந்தியாவிலும் வட்டமிடலாம் என்கிறார் ரோஹித் கில்னானி.

குடும்பத்தினர் பார்க்க உகந்த தொகுப்புகளைக் கொண்ட டிஸ்னி, உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் பெரிய வெற்றியை ஈட்டக் கூடும், நெட்பிலிக்ஸ் நிறுவனத்தை மிஞ்சிவிடக் கூடும் என்று அவர் கணிக்கிறார்.

``டிஸ்னி அளிக்கும் நூலக வசதியை, உலகில் எந்த நிறுவனமும் அதை மிஞ்சிவிட முடியும் என நான் நினைக்கவில்லை'' என்கிறார் அவர்.