வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (21:18 IST)

அண்ணாமலையை தனித்து குறி வைக்கிறதா அதிமுக? பின்வாங்கும் பாஜக - பின்னணி என்ன?

ஜெயலலிதா தொடர்பாக பா.ஜ,க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்வைத்த விமர்சனம் அதிமுக - பா.ஜ.க இடையிலான பனிப்போரை பகிரங்க மோதலாக மாற்றியிருக்கிறது.
 
முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக இருக்கிறார் என்று அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
 
ஆனால், ஒரு கட்சித் தலைவராக அல்லாமல், அண்ணாமலையை அ.தி.மு.க தனித்துக் குறிவைத்திருப்பதாக பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஆகவே, இது அண்ணாமலை vs அதிமுகவா அல்லது பா.ஜ.க. vs அதிமுகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தன. முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது," என்று கூறியிருந்தார்.
 
"முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்," என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே அண்ணாமலை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று அ.தி.மு.க தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கொந்தளித்துவிட்டனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
 
அண்ணாமலையைக் கண்டித்து அதிமுக தீர்மானம்
 
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தாகக் கூறப்படுகிறது.
 
முடிவில், அண்ணாமலையைக் கண்டித்து அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.
 
"பொது வெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பேசி உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பேச்சு, தொண்டர்களிடையே மன வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோதி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் அனைவரும் ஜெயலலிதா மீது மதிப்பு வைத்துள்ளார்கள். அண்ணாமலை திட்டமிட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியுள்ளார்.
 
"1998ஆம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வர மூல காரணமே அ.தி.மு.க தான், 20 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருந்த பா.ஜ.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றுக் கொடுத்ததும் அதிமுகதான்.
 
"பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது," என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அவர் வாசித்தார்.
 
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
 
தனக்கு எதிராக அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணாமலை, “கூட்டணி தர்மத்தை நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதை தான் கூறியிருக்கிறேன். ஆங்கில நாளேடுக்கு நான் கொடுத்திருந்த பேட்டியில், உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் கூறியிருந்தேன் என்று யாராவது நினைத்தால், ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே சமயம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது,” எனத் தெரிவித்தார்.
 
"பெரிய கட்சி பா.ஜ.க.தான்"
 
அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றிய சிறிது நேரத்திலேயே பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக கண்டனத் தீர்மானத்திற்கு பதில் கொடுத்தார்.
 
"அண்ணாமலை என்பவர் தனி நபர் அல்ல. தமிழக பா.ஜ.க என்று தனியாக ஒரு கட்சி இங்கு கிடையாது. பா.ஜ.க என்பது தேசத்திற்கு ஒரே கட்சி தான். அதில் உள்ள தலைவர்களில் மாநிலத்தை பார்க்கும் தலைவர் அண்ணாமலை. இது தனிக்கட்சி கிடையாது. தனித்திட்டங்களோடு அண்ணாமலை செயல்படுவது இல்லை.
 
"உங்களுக்குரிய குறைகள், கருத்துகள் இருக்குமேயானால் அது குறித்து நீங்கள் டெல்லியில் தெரிவிக்கலாம். அதை விடுத்து மாநில தலைவரை தனிமைப்படுத்தி எதோ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்மந்தம் இல்லாத நிலை போல நீங்கள் கற்பனையோடு தீர்மானங்கள் போடுவது வருத்தத்திற்குரியது, வேதனையளிக்கிறது."
 
"கூட்டணி என்பது பொதுவான ஒன்று. கூட்டணியில் பெரியண்ணன் வேலைக்கு இடமில்லை. அதில் சிறிய கட்சி பெரிய கட்சி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பெரிய கட்சி என்பது இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடைய தலைமை பா.ஜ.க தான். இங்கு இருக்கிற கட்சிகளை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களும் குறைத்து மதிப்பிடக் கூடாது," என்று அவர் தெரிவித்தார்.
 
"கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம்"
 
மேலும் தொடர்ந்த அவர், "நான்கு இடங்களில் நாங்கள் தான் வெற்றிபெற வைத்தோம் என கூறுகிறார்கள் தீர்மானம் போடுகிறார்கள். 66 இடங்களில் நாங்களும் வெற்றிக்கு உதவினோம். 66 இடங்களில் வெற்றிபெற்றபோது சி.வி.சண்முகத்தால் வெற்றிபெற முடியவில்லை.
 
"தி.மு.க.வுக்கு வாய்ப்பளிக்கும் சூழ்நிலையை அ.தி.மு.க உருவாக்கக்கூடாது. கூட்டணி குறித்து அ.தி.மு.க மறுபரிசீலனை செய்யட்டும். கூட்டணியை முடிவு செய்வது மேலிடத் தலைவர்கள் தான். அவர்களுடன் அ.தி.மு.க தலைவர்கள் பேசட்டும். எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கேட்காமலா பாஜக மேலிடம் தீர்மானிக்கும். நிச்சயம் கேட்பார்கள்.
 
'கூட்டணி என்பதற்கு இன்னும் காலம் உள்ளது. ஒரே நாளில் கூட்டணிகள் அடியோடு மாறிய வரலாறெல்லாம் தமிழ்நாடு அரசியலில் நடந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தனியாக களம் கண்டவர்கள்தானே," என்று தெரிவித்தார்.
 
அண்ணாமலை விமர்சனம் - பின்வாங்கிய பா.ஜ.க
அ.தி.மு.க தலைவர்களின் ஆவேசத்திற்குக் காரணமான அண்ணாமலையின் கடும் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கரு. நாகராஜன், "எந்த இடத்திலாவது அவரது (ஜெயலலிதா) பெயரை அண்ணாமலை சொல்லியிருக்கிறாரா? தமிழ்நாட்டில் திமுக சார்பில் முதலமைச்சர் இல்லையா? எந்தவொரு இடத்திலும் அண்ணாமலை கட்சியின் பெயரையோ, அவரது பெயரையோ குறிப்பிடவே இல்லை," என்று பதிலளித்தார்.
 
அண்ணாமலைக்கு குறி வைக்கிறதா அதிமுக?
 
தமிழ்நாடு பா.ஜ.க.வில் அண்ணாமலை தலைவரான பிறகு பிராமணத் தலைவர்கள் ஒதுக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. அதன் தொடர்ச்சியாக எஸ்.வி.சேகர் தலைமையில் பிராமணர்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட இருப்பதாக பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன.
 
அந்த அளவுக்கு அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், பா.ஜ.க. மேலிடத்திடம் அவர் மீது புகார் அளித்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அண்மையில் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையை பாராட்டியதன் மூலம் அவரது செயல்பாடுகளையும் அங்கீகரித்துவிட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
 
இந்த நேரத்தில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க, பா.ஜ.கவை அல்லாமல் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையை மட்டும் குறி வைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் மாநில பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான உறவில் விரிசல் நீடிப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
 
மறுபுறம், பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று ஆணித்தரமாக கூறி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு முடிவையும் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
அ.தி.மு.க - பா.ஜ.க. உறவில் நீடிக்கும் விரிசல், முடிவில் கூட்டணிக்கே வேட்டு வைத்தால், தமிழ்நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.