அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்! பாஜக கண்டனம்! – பெரிதாகும் கூட்டணி விரிசல்!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அண்ணாமலைக்கு அதிமுக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருவதுடன், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “இந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உதவியவர் ஜெயலலிதா. பொதுவெளியில் எந்த விதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் “அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை. ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்கள் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்கள்.
அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம். அப்போதுகூட சி.வி.சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக அதிமுகவை கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாக இரு கட்சி தலைமைகள் இடையே நடக்கும் இந்த மோதலால் விரைவில் பாஜக – அதிமுக கூட்டணி இரண்டாக உடையும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K