செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (22:22 IST)

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?

Sri Lanka
சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது.
 
இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது.
 
எதிர்வரும் 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததது.
 
இந்த விடயம் தொடர்பாக மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் வரையில், மேற்படி கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு இலங்கை அதில் கேட்டுள்ளது.
 
இந்த நிலையில் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பானது இரு நாடுகளாலும் சுயாதீனமாகத் தெரிவுசெய்யப்பட்டு பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கிறது. அது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது" என்று வாங் கூறினார்."சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்றும் வாங் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று வாங் கூறினார், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளுக்கு காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
 
இலங்கை துறைமுகத்துக்கு சீன கப்பல் வருகை தள்ளிவைப்பு - இந்தியாவின் அழுத்தம் காரணமா?
 
 
 
இலங்கைக்கு தற்போதைய நிலையில் அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. இலங்கை தனது மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 வீதத்துக்கும் அதிமான தொகையினை சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் கணிசமானவை ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், மத்தள விமான நிலைய உருவாக்கம், கொழும்பிலுள்ள தாமரைக் கோபுர கட்டுமானம் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டுள்ள போதும், அவற்றிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக வருமானங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம்.
 
மறுபுறமாக, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடான இந்தியா - எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றைக் கொள்வனவு செய்வதற்காக மிகவும் தேவையான நேரத்தில் சுமார் 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளதோடு, அரிசி மற்றும் பால் மா போன்றவற்றினை அன்பளிப்பாகவும் கொடுத்து உதவியுள்ளது.
 
இந்தப் பின்னணியில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அனுமதிக்கப்பட்டால், அது இலங்கை - இந்திய உறவில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அவை தொடர்பில் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.
 
"சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதில் இந்தியாவுக்கு ராணுவ ரீதியான நெருக்கடிகள் உள்ளன," என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.
 
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவு என்பது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறும் அவர், "தற்போதைய நெருக்கடியில் பாரிய அளவு பொருளாதார உதவிகளைச் செய்த இந்தியாவுக்கு எதிரான அனுகுமுறையை இலங்கை மேற்கொள்கிறது எனும் அவதானிப்பு எல்லோரிடமும் உள்ளது" எனவும் குறிப்பிடுகின்றார்.
 
பிபிசி தமிழுடன் பேசிய கணேசலிங்கம்; "சீனாவின் பக்கம், தான் சாய்ந்து கொள்ளப் போவதாக காண்பிப்பதன் ஊடாக, இதுவரையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளை இலங்கை எவ்வாறு கையாண்டதோ, அதே போன்றதொரு தளத்தைத்தான் - சீனக் கப்பலின் வருகை திறந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கின்றார்.
 
"சீனாவுடன் தனக்குள்ள உறவை முன்னிறுத்திக் கொண்டு, தன்னுடைய அரசியலை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல், வெற்றிகரமாக இலங்கை நகர்த்திக் கொண்டு வருகிறது. எனவே, சீனக் கப்பலின் இந்த வருகை இலங்கைக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் அமைந்து விடலாம்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
 
ரணில் விக்ரமசிங்க
 
இந்தியாவின் புகார்கள் மற்றும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்துக்குள் நுழைய இலங்கை அனுமதிப்பது, இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இலங்கையுடனான உறவை ஒட்டுமொத்தமாக கைகழுவி விடும் வேலையை இந்தியா மேற்கொள்ளாது எனவும் பேராசிரியர் கணேசலிங்கம் கூறுகின்றார்.
 
"இலங்கையை முற்றாக நிராகரிக்கும் தீர்மானமொன்றுக்கு இந்தியா செல்லும் என நான் நினைக்கவில்லை. இலங்கையுடன் முரண்பட்ட நிலையை இந்தியா வைத்துக் கொள்ளாது. அதாவது இலங்கையுடன் பகைத்துக் கொண்டு இலங்கைத் தூதுவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை எல்லாம் இந்தியா செய்யாது".
 
"இலங்கை அமைந்துள்ள பிராந்தியத்தை தொடர்ச்சியாக தனது செல்வாக்கினுள் வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையிலும், இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் எல்லைப் பகுதிகள் இருக்கின்றன. அதனால் இலங்கையுடன் நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளாது".
 
"இன்னொருபுறம் இந்தியா பகைத்துக் கொள்ளுமளவுக்கு - இலங்கை என்பது ரஷ்யா அல்லது சீனா போன்ற வலுமிக்கதொரு தேசமும் கிடையாது," என்றும் அவர் விவரி்த்தார்.