செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 24 மே 2023 (11:37 IST)

கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ XYZ ஃபார்முலா

கூகுள் நிறுவனத்தில் நீங்கள் பணி வாய்ப்பு பெற விரும்பினால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. உலக அளவில் பெயர் பெற்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் பணிபுரிய விரும்பி, ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து கொண்டே உள்ளனர் என்பது தான் இதற்கு காரணம்.
 
பணியாளர்களை தேர்வு செய்ய கூகுள் பின்பற்றும் நடைமுறை மிகவும் முழுமையானதாக கருதப்படுகிறது. அத்துடன் இந்த நிறுவனம் ஊழியர்களை நடத்தும் விதமும், அவர்களுக்கு வழங்கும் சலுகைகளும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
 
இத்தகைய சிறப்பு மிக்க நிறுவனத்தில் பணிக்கு சேரவேண்டுமென்றால், போட்டிகள் அதிகம் நிறைந்த இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில், பணித் திறனில் பிறரிடமிருந்து நீங்கள் எப்படி வேறுபட்டு தனித்துவமாக திகழ்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுவது முக்கியம்.
 
இதேபோன்று, பணிக்கான நேர்காணல் அழைப்பை பெறுவதற்கு முன் உங்களின் சுயவிவரக்குறிப்பு (Resume), நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரிகளின் (HR Dept) கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டியதும் அவசியம்.
 
‘XYZ’ எனும் சூத்திரத்தை பயன்படுத்தி ஒருவர் தமது சுயக்குறிப்பை மெருகேற்றி கொள்வதன் மூலம், அவருக்கு தங்களது நிறுவனத்தில் பணி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று யோசனை கூறுகின்றனர் கூகுள் நிறுவனத்தின் மனிதவளத் துறையினர்.
 
சுயக்குறிப்பை ஓர் நுட்பமாக எழுதும் உத்தி, இதுநாள் வரையிலான உங்களின் ஒட்டுமொத்த பணிகளில் நீங்கள் செய்த சாதனைகளை முன்னிலைப்படுத்தி காட்டவும், பணி வழங்கும் நிறுவனத்தின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கவும் ஓர் எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள்
 
சுயவிவர குறிப்பு எப்படி இருக்க வேண்டும்?
படிப்பதற்கு மிகவும் எளிமையானதாகவோ அல்லது இரண்டு பக்கங்களுக்கு மிகாமலோ சுயக்குறிப்பு இருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம், சுயக்குறிப்பில் சுருங்கச் சொல்லும்போது தான் நீங்கள் ஏற்கெனவே பணிபுரிந்த அல்லது தற்போது பணிபுரிந்துவரும் நிறுவனத்தில் எந்தவிதமான மாற்றங்களை, சாதனைகளை செய்திருக்கிறீர்கள் என்பதை உடனடியாக சொல்ல இயலும்.
 
இதேபோன்று, சுயக்குறிப்பில் உங்கள் பணி அனுபவத்தை வரிசைப்படுத்தும்போது, சமீபத்தில் வேலை செய்த நிறுவனத்தின் பெயரை முதலிலும், அதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்தை அதற்கு அடுத்தும் என காலவரிசையை இறங்கு வரிசையில் குறிப்பிடுவது சிறப்பு என்கின்றனர் வல்லுநர்கள்.
 
அது என்ன XYZ ஃபார்முலா?
நீங்கள் பணிபுரிந்த அல்லது நிர்வகித்த திட்டப் பணிகள் (Projects) குறித்து தெளிவாக இருங்கள் என்று அறிவுறுத்தும் கூகுளின் ஓர் வலைப்பதிவு, இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால், XYZ சூத்திரத்தை பயன்படுத்தி தெளிவுப் பெறுங்கள் என்றும் அறிவுறுத்துகிறது.
 
X = நிறுவனத்துக்கு பொருந்தும் வகையில் பெறப்பட்ட முடிவுகள் அல்லது சாதனைகளின் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது?
Y = ஒரு திட்டப் பணியில் உங்களின் பங்களிப்பு ஏற்படுத்திய தாக்கத்தை எவ்வாறு மதிப்பீடுவீர்கள் அல்லது ஓர் முடிவை உண்மையில் சாதனை என்று நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? குறிப்பிட்ட ஓர் திட்டப் பணியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
Z = வெற்றி இலக்கை நீங்கள் அடைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? இலக்கை எப்படி அடைந்தீர்கள்?
முடிவுகளில் கவனம் செலுத்துவதால், இந்த சூத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறது கூகுள்.
சுருங்கச் சொன்னால், பணியில் நீங்கள் என்ன சாதித்தீர்கள்? அதனை எப்படி மதிப்பிட்டீர்கள்? சாதனையை நிகழ்த்துவதற்கு நீங்கள் மேற்கொள்ள முயற்சிகள் அல்லது கையாண்ட உத்திகள் என்ன? என்பதை சுயக்குறிப்பில் விளக்குவதே XYZ சூத்திரமாகும்.
 
உங்களது பணித் திறன் மற்றும் அனுபவம் குறித்து பணி வழங்கும் நிறுவனம் புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதால், இந்த தகவல்கள் சுயக்குறிப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.
 
கூகுள் நிறுவனத்தின் யூடியூட் வீடியோக்களில் இருந்து பெறப்பட்ட சில உதாரணங்களை கொண்டு இதனை எளிதாக விளக்கலாம்.
 
நன்று, சிறப்பு, மிகச் சிறப்பு
 
நூற்றுக்கணக்கான மென்பொருள் பொறியாளர்களை ( Software Engineers) கொண்டு புதிய சாஃப்ட்வேர் புரோகிராமை வடிவமைப்பதற்காக நடத்தப்படும் போட்டி ஹேக்கத்தான் (hackathon) எனப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற ஒருவர், இந்த சாதனையை தமது சுயக்குறிப்பில் மூன்று விதமாக குறிப்பிடலாம் என்கிறது கூகுள் நிறுவனம்.
 
“ஹேக்கத்தான் போட்டியில் நான் இரண்டாவது இடம் பிடித்தேன்” என்று குறிப்பிடுவது நன்று.
“50 அணிகள் பங்கேற்ற ஹேக்கத்தான போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தேன்” என்று சொல்வது சிறப்பு.
“மொபைல் காலண்டர்களை ஒத்திசைக்கும் செயலியை உருவாக்கும் நோக்கில் 50 குழுக்கள் பங்கேற்ற போட்டியில், இரண்டு சக ஊழியர்களுடன் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தேன்” என்று சுயக்குறிப்பில் குறிப்பிடுவது மிக சிறப்பு என்று இதனை சிறப்பாக எழுதும் முறையை எடுத்துரைக்கிறது கூகுள் நிறுவனம்.
 
பொத்தாம்பொதுவாய் வேண்டாம் - இதேபோன்று, உங்களது பங்களிப்பால் நிறுவனத்தின் இணையதளத்துக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை (website traffic) அதிகரித்தது என்று சுயக்குறிப்பில் பொத்தாம்பொதுவாக குறிப்பிட வேண்டாம். இதற்கு பதிலாக பார்வையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்தது, அதனை நீங்கள் எப்படி மதிப்பிட்டீர்கள் என்பதை குறிப்பிடுங்கள்.
எண்களைக் கொண்டு உங்கள் சாதனைகளை அளவிடுவது பணி வழங்கும் நிறுவனங்களை கூடுதலாக ஈர்க்கச் செய்யும்.
சுயக்குறிப்பில் நீங்கள் சொல்ல விரும்புவதை தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்லுங்கள். வலுவான வினைச் சொற்களை பயன்படுத்துங்கள். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை (Keywords) முடிந்தால் சுயக்குறிப்பில் பயன்படுத்தவும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்துகிறது.
முந்தைய பணி
தொழில்நுட்பத்தில் ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம், ஒரு பணியிடத்துக்கான விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு முன், அந்த விண்ணப்பதாரரின் திறனை பிரதிபலிக்கும் வகையில் சில கேள்விகளை கணக்கில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது.
உங்களின் பணித்திறனை பிரதிபலிக்கும் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் நீங்கள் எங்கு, எந்தவிதமான பணியை பெற விரும்புகிறீர்கள் என்பது குறித்து நிறுவனம் தெளிவான புரிதலுக்கு வர உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
பணியை எளிதாக்கும் விதத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்ன?
தனி முயற்சி அல்லது குழுப் பணி (Team Work); இவற்றில் எதில் உங்களால் அதிகம் சாதிக்க முடிந்தது?
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அல்லது விவாதங்களை ஊக்குவிப்பது; இவற்றில் எதை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள்?
நீங்கள் இதுவரை ஆற்றிய பணிகளில் எதனை மிகவும் வெகுமதியான பணியாக கருதுகிறீர்கள்? ஏன்?
நீங்கள் இதுவரை பணிபுரிந்த அணிகளில் (Team) சிறந்த அணி எது? அந்த அணியை தனித்துவப்படுத்தி காட்டியது எது?
 
இந்த கேள்விகளுக்கான பதில்களை சுயவிவரக் குறிப்பில் விரிவாகவே அளியுங்கள் என்று அறிவுறுத்துகிறது கூகுள். அதாவது முதலாளிகள் தேடும் பணித் திறன்களை நீங்கள் எங்கே, எப்போது, எப்படி நிரூபித்தீர்கள் என்பதற்கான உதாரணங்களை வேலைக்கான விளக்கத்தில் தெளிவாக குறிப்பிடுங்கள்.
 
உங்களது சாதனைகள் மற்றும் கடந்த கால பணி அனுபவங்கள் குறித்த இந்த விளக்கங்கள், முந்தைய பணிகளில் நீங்கள் கொண்டிருந்த மதிப்பு மற்றும் ஈடுபாட்டையும், புதிய பணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டால் எப்படி சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதையும் எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும் என்கிறது கூகுள்.
 
உங்களின் திறமை, ஆர்வம் மற்றும் இலக்கு என்பதெல்லாம் உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த பல்வேறு அனுபவங்கள் மற்றும் அவற்றின் விளைவாக கிடைத்த வெற்றி, தோல்விகளால் கட்டமைக்கப்பட்டவை என்று கருதுகிறது கூகுள் நிறுவனம். எனவே இவை குறித்து எல்லாம் உங்களின் சுயக்குறிப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கருதுகிறது.
 
திறமைகளின் அடிப்படையில் மட்டும் உங்களை பணியமர்த்தினால் நாங்கள் ஓர் திறமையான பணியாளரை பெறுவோம். இதுவே உங்களது திறன்களுடன் உங்களின் நீடித்த ஆர்வம், மாறுபட்ட பணி அனுபவங்கள் மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களை பணியமர்த்தினால், நாங்கள் ஓர் ‘கூகுளரை’ பெறுவோம். இதையே நாங்கள் விரும்புகிறோம் என்கிறது கூகுள் நிறுவனம்.