ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (12:25 IST)

மைசூர் சாண்டல் சோப்புக்கும் முதலாம் உலகப் போருக்கும் என்ன தொடர்பு? - வியக்கவைக்கும் வரலாறு

"1990 களில் எங்களை போன்றவர்கள் வசிக்கும் கிராமங்களில லைஃப்பாய் (Lifebuoy) சோப் மிகவும் பிரபலம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தினாலும் அது நீண்ட நாட்களுக்கு வந்தது. எவ்வளவு தேய்த்து குளித்தாலும், அவ்வளவு எளிதில் கரையாமல் இருந்ததுடன், அதன் விலையும் குறைவாகவே இருந்தது" என்று லைஃப்பாய் சோப்பை முதன்முதலாக பயன்படுத்திய தமது அனுபவத்தை சிலாகித்து கூறுகிறார் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசி.
 
"சில காலத்துக்கு பிறகு, புதிய வகை குளியல் சோப்புகள் சந்தைக்கு வரத் தொடங்கின. அவற்றில் ஒரு சோப்பின் வாசம் பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிராமத்தில் வீசத் தொடங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது" என்கிறார் அவர்.
 
மைசூர் சாண்டல் என்ற பெயரில் வந்த அந்த சோப்பை, தமது எட்டு அல்லது ஒன்பதாவது வயதில், தமது உறவினர் ஒருவரின் வீட்டில் முதன்முதலாக பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக நினைவிருப்பதாக கூறுகிறார் அந்த கிராமவாசி.
 
அந்த சோப்பின் அட்டையில் வரையப்பட்டிருந்த படங்களை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அந்த சோப்பில் இருந்து வந்த இனிமையான வாசனை மனதை கவர்ந்தது என சிலாகிக்கும் அவர், 25 ஆண்டுகள் கழிந்தும், தான் முதன்முதலில் நுகர்ந்த அந்த சோப்பின் வாசனை இன்னும் நினைவில் மணந்துக் கொண்டிருக்கிறது என்றார் பூரிப்புடன்.
 
ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியான மைசூர் சந்தனக் கட்டை
மைசூர் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் அதிகம் இருந்து வந்தன. சந்தனம் மற்றும் மரக்கட்டைகள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் ராஜ்ஜியத்துக்கு வருவாய் வந்துக் கொண்டிருந்தது. திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் இருந்து, மைசூர் சந்தனக் கட்டைகள் சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
 
20 ஆம் நூற்றாண்டில், மைசூர் சந்தனக்கட்டைகளை இறக்குமதி செய்யும் பெரிய சந்தையாக ஐரோப்பா திகழ்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மைசூர் சமஸ்தானத்தில் இருந்து சந்தனக் கட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
 
முதல் உலகப் போர் நேரத்தில்...
1914 இல் வெடித்த முதல் உலகப் போரின் விளைவாக, கடல் வழி வாணிபம் தடைப்பட்டதால், மைசூர் சந்தன மரத்தின் ஏற்றுமதி தடைப்பட்டது. அதன் காரணமாக சந்தையில் சந்தனத்தின் தேவை குறைந்தது.
 
அப்போது, கிருஷ்ணராஜ வாடியார் -4 மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார். அவரது ஆட்சியில் ‘மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா நாடு’ என்ற பிரபல பொறியாளர் திவானாக பதவி வகித்தார். திரண்ட சந்தனத்தில் இருந்து அதன் எண்ணெய்யை பிரித்தெடுக்கும் வழிமுறையை ஆராயுமாறு விஸ்வேஸ்வரய்யாவிடம் கிருஷ்ணராஜ வாடியார் பணித்தார்.
 
அரசரின் ஆணைப்படி, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் உதவியுடன், சந்தன மரத்தில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை விஸ்வேஸ்வரய்யா வடிவமைத்தார். இதனையடுத்து முதல் சந்தன மர எண்ணெய் தொழிற்சாலை 1916 இல் மைசூரில் திறக்கப்பட்டது.
சந்தர மர எண்ணெய் தொழிற்சாலை திறப்பு விழாவின்போது, மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வாடியாரை காண, வெளிநாட்டினர் வந்திருந்தனர். அப்போது சந்தர மர எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்பட்ட சோப்புகளை மன்னர் அவர்களுக்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.
 
அந்த தருணத்தில் சந்தன மர எண்ணெய்யில் இருந்து சோப் தயாரிக்கும் எண்ணம் மன்னருக்கு தோன்றியது. அதனையடுத்து, பெங்களூரில் உள்ள கப்பன் பூங்காவில் மைசூர் சோப் தொழிற்சாலை 1918 இல் நிறுவப்பட்டு உற்பத்தி தொடங்கப்பட்டது.
 
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1980 இல் மைசூரில் இயங்கி வந்த சந்தன மர எண்ணெய் தொழிற்சாலை, பெங்களூரில் செயல்பட்டு வந்த மைசூர் சோப் தொழிற்சாலை ஆகிய இரண்டையும் இணைத்த அந்த மாநில அரசு, அதற்கு கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட் என்று பெயரும் வைத்தது.
 
மைசூர் சந்தன எண்ணெய் மற்றும் சோப்புக்கு 2006 இல் புவிசார் குறியீடும் கிடைக்கப் பெற்றது.
 
சந்தன மரத்தில் இருந்து எண்ணெய் எப்படி பிரித்தெடுக்கப்படுகிறது?
சந்தன மர எண்ணெய் எடுப்பதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகளான மரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 15 முதல் 25 ஆண்டுகள் பழமையான மரங்கள் தரமான எண்ணெய்யை தருபவையாக உள்ளன. எனினும், எண்ணெய் பிரித்தெடுக்கும் பணிக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 
ஹார்ட்வுட் (Heartwood) மற்றும் சேப்வுட் (Sapwood) எனப்படும் முக்கியப் பகுதிகள், உலர்ந்த சந்தன மரக்கட்டைகளில் இருந்து முதலில் பிரித்தெடுக்கப்படுகின்றன.
 
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட ஹார்ட்வுட் மற்றும் சேப்வுட், இயந்திரம் அல்லது பணியாளர்கள் மூலம் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன.
 
பிரிக்கப்பட்ட ஹார்ட்வுட்கள் இயந்திரத்தில் செலுத்தப்பட்டு, மேலும் சிறு துண்டுகளாக நறுக்கப்படுகின்றன. இந்த சிறு துண்டுகள் மேற்கொண்டு பொடி (Powder) ஆக்கப்படுகின்றன.

சந்தன மரப் பொடி கொதிகலனில் போடப்பட்டு கொதியூட்டப்படுகிறது. அப்போது, கொதிகலனின் மேல் உள்ள குழாயில் இருந்து வெளியேறும் நீராவுடன், பொடியில் இருந்து சந்தன எண்ணெயும் வெளி வருகிறது.
 
இந்த நீராவி ஓர் தொட்டியில் செலுத்தப்பட்டு குளிர்விக்கப்படுகிறது. இதில் நீராவி தண்ணீராக மாறும் போது அதன் மேற்பரப்பில் சந்தன எண்ணெய் மிதக்கிறது.
 
நீரில் மிதக்கும் இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது கச்சா சந்தன எண்ணெய் எனப்படுகிறது. இதில் நீரும், அசுத்தமும் கலந்துள்ளதால் இது கச்சா சந்தன எண்ணெய் என்றழைக்கப்படுகிறது.
 
கச்சா எண்ணெயில் இருக்கும் நீரும், அசுத்தமும் முற்றிலும் அகற்றப்படவே, தூய்மையான சந்தன எண்ணெய் கிடைக்கிறது.
 
சந்தன மரக்கட்டையின் மையத்தில் கோதுமை நிறத்தில் இருக்கும் பகுதிக்கு ‘ஹார்ட்வுட்’ எனப் பெயர். இதிலிருந்து தான் தரமான எண்ணெய் கிடைக்கிறது.
 
ஹாார்ட்வுட்டை சுற்றி, வெள்ளை நிறத்தில் காணப்படும் பகுதி ‘சேப்வுட்’ எனப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் தரம் குறைந்ததாகவே கருதப்படுகிறது.
 
சோப் எப்படி தயாரிக்கப்படுகிறது?
எரி சோடா, பனை எண்ணெய், உப்பு நீர் ஆகியவை ஒரு பெரிய இருப்பு பாத்திரத்தில் ஊற்றி கலக்கப்பட்டு நன்கு கொதிக்க வைக்கப்படுகிறது.. இந்த சூட்டில் அவை ஒருங்கிணைந்து சோப் கட்டியாக மாறுகின்றன.
 
கூழ் நிலையில் இருக்கும் அந்த கட்டியில் இருக்கும் அசுத்தங்கள் நீக்கப்பட்ட பின் அது பெரிய மெழுகு கட்டியாக மாறுகின்றது. இந்த கட்டியானது சோப் நூடுஸ்ஸ் எனப்படும் சிறு துண்டுகளாக வெட்டிப்படுகின்றன.
 
வெட்டப்பட்ட சோப் துண்டுகளில் சந்தன எண்ணெய், வாசனை திரவியங்கள், வண்ணங்கள், கிளிசரின் உள்ளிட்டவை சேர்க்கப்படுகின்றன. அதன் பின்னர் கூழ் பாரானது இயந்திரத்தில் செலுத்தப்பட்டதும் சோப் ரெடியாகிறது.
 
பெரிய அளவிலான இந்த சோப், பின்னர் பல்வேறு வடிவங்களில் வெட்டப்பட்டு சிறு சோப்புகளாக தயாரிக்கப்படுகின்றன. இறுதியாக, மைசூர் சாண்டல் சின்னம் மற்றும் பெயர் அச்சிடப்பட்ட அட்டைக்குள் வைக்கப்பட்டு, சோப்புகள் பேக் செய்யப்படுகின்றன.
 
சபோனிஃபிகேஷன் செயல்முறையால் அதிக மாசு ஏற்படுவதாக சோப் தயாரிப்பு நிறுவனம் கருதுகிறது. எனவே சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்க்கும் நோக்கில், தற்போது சோப் நூடுல்ஸை நேரடியாக வாங்கி, இந்நிறுவனம் சோப் தயாரித்து வருகிறது.
 
தகுதியின் அடையாளம்
மைசூர் சாண்டல் சோப் என்ற பெயரை கேட்டாலே நமக்கு உடனே அதன் இலச்சினை (Logo) தான் நினைவு வரும். யானையின் தலையும், சிங்கத்தின் உடலும் இணைந்தபடி இருக்கும் இந்த இலச்சினை ‘ஷரபா’ என்றழைக்கப்படுகிறது.
 
இந்து மத புராணங்களில் ஞானம், தைரியம் மற்றும் வலிமையின் அடையாளமாக ஷரபா குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் இதனை மைசூர் சாண்டல் சோப்புக்கான இலச்சினையாக தேர்வு செய்ததாக, தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் கூறுகின்றது.
 
கர்நாடக மாநில அரசின் இலச்சினையாக ‘ஷரபா’ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
சந்தையில் விற்பனைக்கு வந்த சோப்புகள் பட்டை (Bar) வடிவில் இருந்த நிலையில், மைசூர் சாண்டல் சோப் வித்தியாசமாக நீள்வட்ட (Oval) வடிவில் விற்பனைக்கு வந்தது.
 
இதேபோன்று, மைசூர் சாண்டல் பேக் செய்யப்படும் அட்டையும், ஓர் நகைப்பெட்டியை போன்று தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது. மலர் ஓவியங்கள் அச்சிடப்பட்ட, செவ்வக வடிவிலான அந்த பெட்டி, வாடிக்கையாளர்களின் மனங்களை சுண்டி இழுப்பதாக உள்ளது.