வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (14:28 IST)

கொரோனா பொதுமுடக்கம் - கடுமையான வறுமை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படும் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தாலுகாவில் வசித்து வரும் மலர்விழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒன்பதாம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு செல்லவிருக்கிறார். டிப்ளமோ நர்சிங் படிப்பு முடித்து செவிலியர் ஆக வேண்டும் என்பதே இவரது கனவு. ஆனால், ஜுலை மாதம் இவர் திருப்பூரில் இயங்கிவரும் தனியார் பஞ்சாலையிலிருந்து தொழிலாளியாக மீட்கப்பட்டார்.

படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் வேலைக்காக திருப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டது பற்றி பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

"எனது அப்பா கட்டட வேலைக்கு செல்கிறார், அம்மா தினக்கூலியாக வேலை செய்பவர். எனது அண்ணன் ஒரு மாற்றுத்திறனாளி. கொரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையில்லாததால், வாழ்வாதாரத்திற்காக கிடைத்த சொற்ப வருமானமும் இல்லாமல் போனது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வீட்டில் வறுமை அதிகரித்தது. பள்ளி மூடப்பட்டிருப்பதால் நானும் வீட்டில் இருந்தேன். இந்த நிலையில் தான் படிக்க வைத்துக்கொண்டே வேலை தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக்கூறி ஏழ்மையான பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியோடு திருப்பூருக்கு அழைத்துச்சென்றனர்"

"படிக்க வைத்துக்கொண்டே வேலை தருவதால், கல்வி கிடைப்பதோடு, குடும்ப வறுமையும் குறையும் என்ற நம்பிக்கையில் எனது பொற்றோர்களும் என்னை திருப்பூருக்கு அனுப்பினர். ஆனால், அங்கு சென்று பார்த்த பின்னர் நிலைமை வேறாக இருந்தது. பஞ்சாலைக்குள் சென்றபின்னர் எங்களை கூட்டிச் சென்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். வேலை முடிந்ததும் பாடம் நடத்த ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும், என்னோடு வந்திருந்த சிலரும் வேலை செய்யத் துவங்கினோம்.

ஆனால், சிலவாரங்கள் கழிந்தும் பாடம் நடத்தவோ, படிப்பதற்கோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு வேலை செய்துவரும் பெண்களை கேட்டபோது, 'படிப்பதற்கு யாருக்கும் இங்கு அனுமதியில்லை, தேர்வு நாட்களின்போது மட்டும் வேலை செய்து முடித்ததும் சில மணி நேரம் படிக்க அனுப்புவார்கள்' என தெரிவித்தனர். இங்கு நடப்பவை குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த கூட வழியில்லை. ஜூன் மாதம் முழுவதும் கடுமையாக வேலை செய்தேன். செவிலியர் ஆக வேண்டும் என்ற கனவோடு எனது வாழ்க்கை பஞ்சாலையிலேயே முடிந்துவிடும் என நினைத்தேன், அப்போது தான் அரசு அதிகாரிகள் எங்களை மீட்டனர்" என கூறினார் 15வயதாகும் பள்ளி மாணவி.

இவரோடு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதாகும் ரேவதியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பஞ்சாலையிலிருந்து தொழிலாளியாக மீட்கப்பட்டவர்.

"நான் எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பு செல்கிறேன். எனது அப்பா விபத்தில் சிக்கியதால் உடல் நலிவடைந்து வீட்டில் இருக்கிறார். நான் உள்பட நான்கு மகள்கள். எனது அம்மாவும் சகோதரிகளும் கூலி வேலை செய்துதான் குடும்ப செலவுகளை கவனிப்பதோடு, என்னையும் படிக்க வைத்தனர். கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழல் உருவானது. எதாவது வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது."

"மாதம் ரூ.75௦௦ சம்பளம், படிப்புக்கான வசதிகள், தங்குமிடம், சாப்பாடு அனைத்தும் வழங்கப்படும் எனக் கூறி திருப்பூருக்கு என்னை அழைத்துச் சென்றனர். பஞ்சாலையில் மணிக்கணக்கில் வேலை செய்ய வைத்தனர். படிப்பதற்கு அனுமதியில்லை. ஒரே அறையில் 20 பேர் தூங்க வேண்டும். மாதத்திற்கு ரூ.4௦௦௦ ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. படித்து முடித்து ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே என் கனவு. ஆனால், வறுமை துரத்துவதால் பள்ளி படிப்பை தாண்டுவதே சவாலாக உள்ளது. பஞ்சாலையிலிருந்து இப்போது காப்பாற்றப்பட்டிருந்தாலும், பள்ளிப் படிப்பை கைவிட்டு எங்காவது பாதுகாப்பான வேலைக்கு செல்வதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை" என வேதனையுடன் தெரிவிக்கிறார் இந்த பள்ளி மாணவி.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதாலும், குடும்ப வறுமை காரணத்தாலும் இவர்களைப்போன்று திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மட்டுமே திருப்பூரில் இயங்கிவரும் பஞ்சாலைக்கு தொழிலாளியாக அழைத்து வரப்பட்ட நாற்பது பள்ளி மாணவ மாணவிகள் ஜூலை மாதம் மீட்கப்பட்டனர்.

இவர்கள் மீட்கப்பட்ட அடுத்த சில வாரங்களில் அதே பஞ்சாலையிலிருந்து 134 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சி.மு.சிவபாபு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையிலேயே பஞ்சாலையில் சோதனை நடத்தப்பட்டு இந்த விவகாரம் வெளியே வரத்துவங்கியது.
குழந்தை தொழிலாளர்முறையை ஒழிக்க சட்டங்களில் சில மாற்றங்கள் தேவை என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே.அசோக். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தில் தன்னார்வலர் சி.மு.சிவபாபு தரப்பில் இவர் வாதாடியவர்.

"இந்திய தண்டனை சட்ட விதிகளின்படி, 13 வயதுக்குட்பட்டவர்களை எந்த தொழிலில் பணியமர்த்தினாலும் அது குற்றமாக கருதப்படும். ஆனால், 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை 'வளர் இளம் சிறார்கள்' எனவும், சுயவிருப்பத்தில் அவர்கள் ஆபத்தில்லாத தொழில்களில் ஈடுபடலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தியே 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தைகள் காட்டி, அழைத்து வந்து வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். 18 வயதில் தான் வாக்களிக்க முடியும் என்றிருக்கும்போது, 14 வயது வரை மட்டுமே கட்டாயக் கல்வி என்பது முரணான வரையறைகள்" என்கிறார் இவர்.

"திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்ல, திருச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளும் இளைஞர்களும் திருப்பூர், கோவை மற்றும் சென்னை போன்ற தொழில் நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை குடும்பங்களை குறிவைத்து பெற்றோர்களின் ஒப்புதலோடும், குழந்தைகளின் சம்மதத்தோடும் 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை தொழிற்சாலைகளில் பணியமர்த்துகின்றனர். இதனால், நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயாது. எனவே, 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரையும் குழந்தை என வகைப்படுத்த வேண்டும். குழந்தைகளை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்கிறார் ஜே.அசோக்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திஷா மிட்டல் கூறுகையில், 'குழந்தைகளை பணியமர்த்திய சென்னியப்பா பஞ்சாலை நிறுவனம் மீது சேவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துபவர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு குழுவை உருவாக்கியுள்ளோம். குழந்தை தொழிலாளர்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், குழந்தை தொழிலார்கள் குறித்து புகார்களை தெரிவிப்பதற்காக பிரத்யேக தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளோம். ’சைல்டு லைன்’ மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்." என தெரிவித்தார்.

குழந்தை தொழிலாளர் சட்டம் 2016 திருத்தத்தின் படி, 14 வயதுகுட்டப்பட்ட குழந்தைகளை பணியமர்த்தினாலும், 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் சிறார்களை ஆபத்தான வேலைகளில் பணியமர்த்தினாலும் 6 மாதங்களிலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வற்புறுத்தி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முதல்முறை எச்சரிக்கையும், அடுத்தடுத்த முறை பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.