பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸின் தலைவர் இஸ்மாயில் சமீபத்தில் கொல்லப்பட்ட நிலையில் ஹமாஸின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவரால் இஸ்ரேல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு தளமான காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இந்த போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸை அழிக்கும் வரை இஸ்ரேல் ராணுவம் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஈரான் சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவரது அறையில் வெடிக்குண்டு வைத்து கொல்லப்பட்டார். இதனால் ஹமாஸ் - இஸ்ரேல் போரில் ஈரானும், ஹமாஸுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது.
அடுத்த ஹமாஸ் தலைவர் யார்? என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் யாஹ்யா சின்வார் என்பவரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவின் தலைவராக இருந்தவர்தான் இந்த யாஹ்யா சின்வார். மேலும் முதன்முதலில் இஸ்ரேலுக்குள் புகுந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்ற ஹமாஸின் திட்டத்திற்கு சூத்திரதாரியாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் தலைவராக்கப்பட்டுள்ளது இஸ்ரேலை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், ஹமாஸின் புதிய தலைவரான யாஹ்யா சின்வார் அழித்தொழிக்கப்பட வேண்டியவர் என்றும், ஹமாஸ் அமைப்பை உலகத்தை விட்டே துடைத்து எறிவோம் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.
Edit by Prasanth.K