இந்தியர் என நினைத்து பாகிஸ்தான் விமானி அடித்துக் கொலை ! – எல்லையில் நடந்த சோகம்
எல்லையில் விழுந்து அடிபட்டிருந்த பாகிஸ்தான் விமானி ஒருவரை இந்தியர் என நினைத்த பாகிஸ்தான் நாட்டு மக்கள் அவரை அடித்ததில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது பாகிஸ்தான் விமானங்களை துரத்தி சென்ற இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி இரண்டு நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திய விமானப்படையால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாஜாஸ் உத்தீன் என்ற விமானி ஒருவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தபோது அவரை இந்தியர் என நினைத்து மக்கள் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அவர் பாகிஸ்தானியர் எனத் தெரிந்தது அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் அவரது உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞரான காலித் உமர் என்பவர் வெளியிட்டுள்ளார்.