வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (19:56 IST)

சைபீரியாவை நோக்கி வேகமாக நகரும் வட துருவம்! குழம்பும் திசைக்காட்டிகள்!

வட துருவ காந்த புல நகர்வால் திசைக்காட்டிகளில் ஏற்படும் மாற்றங்கள் கப்பல்கள், விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

பூமியை சுற்றியுள்ள வட மற்றும் தென் துருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவதாக அறியப்பட்ட நிலையில் அதன் வேகம் தற்போது அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் இரு முனைகளில் இருந்து செயல்படும் வடக்கு மற்றும் தெற்கு காந்த புலன்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் அபாயகரமான கதிர்வீச்சுகளிலிருந்து பூமியையும், உயிரினங்களையும் காத்து வருகின்றன.

தென் துருவம் அண்டார்டிகா பாலைவனத்தின் ஒரு பகுதியிலும், வட துருவம் கனடாவின் ஆர்டிக் பகுதியிலும் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த இரு துருவங்களை கொண்டுதான் கப்பல்கள், விமானங்கள் போன்றவற்றை இயக்கும் திசைக்காட்டிகள் செயல்படுகின்றன.

ஆனால் 1881ம் ஆண்டு வட காந்த துருவம் கண்டறியப்பட்ட நாள் முதலே அது தனது நிலையிலிருந்து மெல்ல நகர்ந்து கொண்டே வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 10 கி.மீ என்ற அளவில் நகர்ந்து வந்த காந்த துருவம் தற்போது ஆண்டுக்கு 54 கி.மீ வேகத்தில் சைபீரியா நோக்கி நகர்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் திசைகள் கணிப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வட காந்த துருவம் மாறும் தொலைவை கணக்கிட்டு முன்கூட்டியே திசைக்காட்டிகளில் மாற்றங்கள் செய்யப்படும். தற்போது காந்த துருவம் மாறும் நிலை வேகமடைந்து உள்ளதால் அதற்கேற்றவாறு எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படாதபடி மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாய் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.