திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (12:49 IST)

கனவுகளுக்குள் தொடர்பு கொள்ளும் புதிய டெக்னாலஜி! அமெரிக்க நிறுவனம் சாதனை!

Brain

அமெரிக்காவை சேர்ந்த ரேம்ஸ்பேஸ் என்ற நிறுவனம் கனவுகளுக்குள் இருக்கும் நபர்களை நிஜ வாழ்விலிருந்து தொடர்பு கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

 

 

உலகில் விடை கண்டுபிடிக்க முடியாத புதிர்களில் ஒன்று மனிதனுக்கு உறக்கத்தில் வரும் கனவுகள். கனவுகள் சிலருக்கு ஆசுவாசம் அளிப்பதாகவும், பலருக்கு பீதி ஏற்படுத்துவதாகவும் உள்ளன. பொதுவாக அழமான கனவில் இருக்கும் ஒரு நபரை தொடுதல் உணர்வை ஏற்படுத்தாமல் விழிக்க செய்வது கடினம்.

 

இந்நிலையில் கனவில் ஆழ்ந்திருக்கும் நபரை அவரை விழிக்க செய்யாமலே தொடர்பு கொள்வது குறித்த ஆய்வை அமெரிக்காவின் கலிஃபொர்னியாவை சேர்ந்த ரேம்ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொண்டது. பொதுவாக ஆழ்ந்த கனவில் ஒரு நபர் இருந்தாலும், வெளி உலகில் பேசும் வார்த்தைகள், பாடல்கள் கனவில் ஒலிக்கும். ஆனால் அது கனவின் ஒரு பகுதியாகவே தோன்றும். கனவு கலைந்தபின் அந்த பேச்சுகள், பாடல்கள் நினைவில் பெரும்பாலும் மறைந்துவிடும்.
 

 

இந்நிலையில் தூக்கத்தில் அதிகம் கனவு காணும் இரு நபர்களை ஆய்வுக்கு உட்படுத்திய ரேம்ஸ்பேஸ் ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் ஆழ்ந்த கனவில் இருக்கும்போது அவர்களுக்கு சில வார்த்தை சமிக்ஞைகளை ஹெட்செட் மூலமாக ஏற்படுத்தியுள்ளனர். கனவில் கேட்ட அந்த வார்த்தைகளை நல்ல உறக்கத்திலும் அந்த நபர்கள் சத்தமாக சொன்னதோடு, கனவு கலைந்த பின்னும் நினைவு வைத்திருந்துள்ளனர்.

 

இந்த ஆய்வானது கோமா நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சை, மனோதத்துவம் போன்ற பல்வேறு மூளைசார் சிகிச்சைகளுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என ரேம்ஸ்பேஸ் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 

Edit by Prasanth.K