சீனாவில் பிரபல யூட்யூபராக இருந்த பெண் லைவ் வீடியோவில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய தலைமுறை இடையே யூட்யூப், இன்ஸ்டாகிராம் மோகம் அதிகரித்துவிட்ட நிலையில் யூட்யூப் க்ரியேட்டர்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். தற்போது Travel Vlog, Food Vlog வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பலரும் இந்த வகை வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறாக சீனாவில் உணவு வீடியோக்கள் செய்து பிரபலமானவர்தான் பான் ஜியோடிங் என்ற பெண்.
இவர் உணவுகளை அதீதமாக சாப்பிடுவது, உணவு ரிவ்யூ என பல வீடியோக்களை செய்து பிரபலமானார். ஆனால் அதேசமயம் அதீதமான உணவுகளின் காரணமாக இவர் உடல் எடை வேகமாக அதிகரித்தது. 120 கிலோ எடையில் இருந்த பான் ஜியோடிங் சமீபத்தில் உணவு செரிமான கோளாறு தொடர்பான சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து வெளியான சில நாட்களிலேயே உணவு சேலஞ்ச் ஒன்றை லைவ் வீடியோவாக தனது சேனலில் செய்துள்ளார். சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு லைவ் செய்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவர் அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிமானமாகாமல் இருந்ததுமே அவர் உயிரிழக்க காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K