வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By J.Durai
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (10:30 IST)

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி!

Dubai Tamilians
நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு.


 
ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்படி துபாயில் வாழும் நம் தமிழ் மக்களும் இப்படி தமிழ் சினிமா இசை மீது கொண்ட காதலால் உலக சாதனை செய்யும் விதமாக பிரமிப்பூட்டும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இசையில் ஆர்வம் கொண்ட துபாய் வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 24 மணி நேரம் ‘நான்ஸ்டாப்’பாக திரையிசைப் பாடல்களை பாடி ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்’ஸில் இடம்பெற்று உலக சாதனையை படைத்துள்ளனர்..

ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் மதிப்பீட்டாளர் விவேக் கூறும்போது, "இதற்கு முன்பு இதேபோன்று 13.5 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் பாடியது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது இவர்கள் முறியடித்துள்ளனர்" என்றார்..

 
இந்த சாதனை நிகழ்ச்சியின் பெருமைமிகு பார்வையாளராக, இதில் பங்கேற்கும் இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனா பங்கேற்க, அவரது முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும் நடிகை கோமல் சர்மா, மக்கள் தொடர்பாளர் A.ஜான் ஆகியோரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பகவதி ரவி, ஸ்ரீ பட், ஆர்ஜே ருபீனா சுபாஷ் ஆகியோர் இந்த நிகழ்வை அழகாக ஒருங்கிணைத்தனர்.

இதில் பகவதி ரவி, தியாகு, பாலாஜி, ராகேஷ், அஜய், விக்னேஸ்வரன், ஜெகநாதன், பத்மினி, வள்ளி ரவி, மிருதுளா பாலகிருஷ்ணன், சரண்யா, ஜனனி, ஜெய்ஸி மஜோலி, சரண்யா உள்ளிட்ட 15 பாடகர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்கள்.

துபாயில் செய்யப்பட்ட இந்த இருபத்தி நான்கு மணி நேர தொடர் கரோகி பாடல் சாதனையை முறியடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்றும் பேசப்பட்டது.