வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2019 (13:52 IST)

வெயிலால் 15 நாட்களில் 2964 பேர் இறந்தனர் – ஐரோப்பாவில் சோகம்

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வரும் தீவிர வெப்பசலனம் காரணமாக கடந்த 15 நாட்களில் 2964 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் மாறிவரும் வானிலை மாறுபாட்டால் சுற்றுச்சூழல் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகிறது. பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது தொடங்கி அதிக மழை, சுட்டெரிக்கும் வெயில் வரை உலகமெங்கும் பல வகையான இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

குளிர்ச்சியான பிரதேசமாக அறியப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தற்போது அதிக வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, லக்ஸம்பெர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவு வெப்பம் பதிவாகியிருக்கிறது.

வெயிலினால் மக்களும், சுற்றுலா பயணிகளும் நீச்சல் குளங்களையும், கடற்கரைகளையும் நோக்கி படையெடுத்துள்ளனர். புகழ்பெற்ற ரோட்டர்டாம் பாலத்தின் கம்பிகள் வெயிலால் கொதித்து போயிருக்கின்றன. அதன் வெப்பக்காற்றால் பலர் பாதிக்கப்படுவதால் தண்ணீரை பாலத்தின் கம்பிகளில் பீய்ச்சியடித்து குளிர்வித்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களில் ஐரோப்பா முழுவதும் வெப்பசலனம் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 2964 என ஒரு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 முதல் 70 வயது முதியவர்கள் என கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலும், அதீத வெப்பத்திற்கு பழகாத ஐரோப்பிய மக்களின் உடல்நிலையுமே இந்த இறப்பு சம்பவங்களுக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.