பிரதமர் மோடி மீது வழக்கு தொடர்வேன் - வாட்டாள் நாகராஜ் ஆவேசம்
சாம்ராஜ் நகருக்குள் வராத பிரதமர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடுக்கப் போவதாக கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
வருகிற மே 12 ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் ஆளுங் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டுமென, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மோடிக்கு தைரியம் இருந்தால் ராசியில்லாத நகரமாக கருதப்படும் சாம்ராஜ் நகருக்குள் காலடி வைக்கட்டும் என்று சவால் விட்டார். ஏனென்றால் சாம்ராஜ்நகர் நகருக்குள் காலடி வைத்தால் கர்நாடகாவில் ஆட்சி பறிபோகும் என்பது அங்குள்ள அரசியல்வாதிகளின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் கர்நாடகத்திற்கு சென்ற மோடி சாம்ராஜ் நகருக்கு செல்லவில்லை.
இதனையடுத்து கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், பிரதமர் மோடி சாம்ராஜ் நகருக்கு வராதது தவறென்றும், மூடநம்பிக்கைக்கு எதிராக பேசும் மோடி, ஏன் அதனை கடைப்பிடிக்கவில்லை என கேட்டுள்ளார்.
சாம்ராஜ்நகரை புறக்கணித்து இங்குள்ள மக்களின் மனதை காயப்படுத்திய மோடி மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.