தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை நீங்கியது
தூத்துக்குடியில் வன்முறையை தடுக்க கலெக்டரால் விதிக்கப்பட்டிருந்த 144 தடை இன்று நீக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை விதித்தது. பதற்றம் நிலவியதால் 144 தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார்.