பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்பட பல படங்களை இயக்கியவர் சேரன். இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு திருமணம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடந்தது. இந்த விழா திருமண விழா போல் நடந்தது, விழாவில், கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார் பங்கேற்றனர். இதேபோல் நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்பட பலர் பங்கேற்றனர்.
கவிஞர் வைரமுத்து விழாவில் பேசுகையில், ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது சேரன் இயக்கியுள்ளார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக்கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டுகொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
“திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திரு மணத்தை திருத்த பார்க் கிறதா? அல்லது திரு மணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.” இவ்வாறு கூறினார்,