புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (14:30 IST)

வைரமுத்து மீது அடுத்தடுத்து புகார் – சினிமா பாடல்களில் தொடரும் கருத்து திருட்டு ?

பாடலாசிரியர் வைரமுத்து மீது சகப் பாடலாசிரியரான கார்த்திக் நேத்தா கூறியக் குற்றச்சாட்டை அடுத்து இப்போது மற்றொருப் பாடலாசிரியரான யுகபாரதியும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சமீபமாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன சற்குனம் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் போறானே போறானே என்ற பாடலை கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அந்த ஒருப் பாடலை மட்டும் அவர் எழுதவில்லையாம். படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ’சரசர சாரக்காத்து வீசும்போது’ என்ற பாடலையும் அவர்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பாடலின் சில வரிகளை மாற்றிப் போட்டு தான் எழுதியது போல வைரமுத்து உபயோகப்படுத்திக் கொண்டதாக சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

அதனால் இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறி விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கார்த்திக் நேத்தாவை அடுத்து பிரபல பாடலாசிரியான யுகபாரதியும் வைரமுத்து மீது இதேக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் கடந்த ஆண்டு பேசிய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

’தென்றல் என்ற படத்தின் பிரபல பாடலான புத்தம் புது பாட்டெடுத்தேன் தாண்டவக்கோனே என்ற பாடலின் ஆரம்ப வரிகளைத் தான் எழுதியதாகவும் அந்த வரிகளைக்கொண்ட அந்தப் பாடலுக்கு  மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியான போது யுகபாரதிக்கு எந்த விதமான கிரெடிட்ஸும் கொடுக்காமல் வைரமுத்துவின் பெயரில் பாடல் வெளியாகியுள்ளது’ எனவும் கூறியுள்ளார்.

இதுபோல மற்றொரு கவிஞரும் ஆவணப்பட இயக்குனருமான ரவி சுப்ரமணியன் 13 வருடங்களுக்கு முன்பு ஒருத் தொலைக்காட்சி தொடருக்கு எழுதியப் பாடலை வைரமுத்துவின் பெயரில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து வைரமுத்து மீது வைக்கப்படும் இந்தப் பாடல் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்துவிடம் இருந்து எந்த விதமானப் பதிலும் வரவில்லை.