நிவின்பாலி இளம்வயது மோகன்லால் - நடிகை துளசி
‘நிவின்பாலியைப் பார்க்கும்போது இளம்வயது மோகன்லால் மாதிரியே இருக்கிறார்’ என நடிகை துளசி தெரிவித்துள்ளார்.
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. இதுதான் நிவின் பாலி தமிழில் நேரடியாக அறிமுகமாகும் முதல் படம். இந்தப் படத்தில் நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமிப்பிரியா சந்திரமெளலி, பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை துளசி, “நிவினைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் நிவின்பாலியைப் பிடிக்கும். நிவினைப் பார்க்கும்போது இளம் வயது மோகன்லாலைப் பார்ப்பது போல் இருக்கிறது. வழக்கறிஞராக இருந்த கௌதம் இந்த படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்” என்று கூறினார்.