திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (10:29 IST)

“நயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துள்ளேன்” - ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்

‘நயன்தாராவின் ஈடுபாட்டைக் கண்டு அசந்துவிட்டதாக’ ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் படம் ‘அறம்’. நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்துக்கு,  ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
“எனது சினிமா வாழ்க்கையில், சிறந்த படங்களில் ஒன்று 'அறம்'. இப்படத்தின் கதையை முதல் முறையாகக் கேட்டபொழுதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையை சித்தரிக்க 'க்ரே ' கலரைப் பயன்படுத்தி, அதற்கான லைட்டிங்கை கொடுத்து,  சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கு ஏற்பத்தான் நயன்தாராவின்  ஆடையும் வடிவமைக்கப்பட்டது.
 
வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தைக்  கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்யேக லென்ஸைப் பயன்படுத்தினேன். நயன்தாராவுடன் நான் இணைந்து  பணிபுரிவது இது மூன்றாவது படம். 'ஆரம்பம்', 'காஷ்மோரா' படங்களுக்குப் பிறகு இப்படத்தில் நயன்தாராவுடன்  பணியாற்றியுள்ளேன் . அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாட்டைக்  கண்டு அசந்துள்ளேன். இக்கதையின் மேல் இயக்குநர் கோபி நயினார் வைத்திருந்த நம்பிக்கையும், அவரது  எழுத்தும்தான் இப்படத்தை சிறந்த படமாக்கியுள்ளது. வார்த்தைகளால் சொல்லமுடியாத திருப்தியையும், பெருமையையும்  'அறம்' எனக்கு கொடுத்துள்ளது” என்றார் ஓம்பிரகாஷ்.