செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (15:23 IST)

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிரான மனு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 
விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 
 
இந்த படத்திற்காக கொடுக்கப்பட்ட பணத்தை உன்னைபோல் ஒருவன் படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஸ்வரூபம் 2 படத்திற்கும் கமல் பலரிடம் கடன் வாங்கியிருப்பதால், கமல் மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடி கொடுக்க வேண்டும். இல்லையெனில், விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு தொடர்பான கமல்ஹாசன் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் “நடிப்பு மற்றும் இயக்கத்துகாக முன்பணமாக ரூ.4 கோடி மட்டுமே பெற்றிருந்தேன். அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்ப கட்ட பணிகளுக்காக செலவாகி விட்டது. படத்தை எடுக்க பிரமீட் சாய் மீரா நிறுவனத்தால் மேற்கொண்டு பணம் தர முடியவில்லை. மர்மயோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி தருவேன்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து பிரமீட் சாய் மீரா நிறுவனத்தின் இடைக்கால மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.