1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (11:04 IST)

தீர்ப்பு கேட்டு கண்ணீர் விட்ட கை கூப்பிய மு.க.ஸ்டாலின்...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்டு திமுக செயல்தலவரும், கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்ணீர் வடித்தனர்.

 
கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
 
இதை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. அதேசமயம், தலைவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 5 வழக்குகளும் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. எனவே, அந்த 5 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். 
 
ஆனாலும், பல்வேறு காரணங்களை கூறி மெரினாவில் இடம் அளிக்க முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், பலமான காரணங்களை எடுத்துரைத்து திமுக தரப்பு வழக்கறிஞரும் தனது வாதத்தை முன்வைத்தார்.
 
இதையடுத்து, தற்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்டு ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்கு அருகில் கூடியிருந்த திமுகவினர் உணர்ச்சி மிகுதியில் கூக்குரல் எழுப்பினர். இதை அறிந்து ஆனந்த கண்ணீர் விட்ட மு.க.ஸ்டாலின் அங்கிருந்த தொண்டர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு உணர்ச்சி மிகுதியில் அழுதார். அவருக்கு அருகே நின்றிருந்த துரைமுருகன், கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் மூலம் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டம் 14 மணி நேர போராட்டத்திற்கு பின் முடிவிற்கு வந்துள்ளது.