1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்..?

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகம்புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
 
ஒரு காலத்தில் தேவர்களுக்கு துன்பம் கொடுத்த அனலாசுரன் என்ற அசுரனை எதிர்த்து விநாயகர் போரிட்டார். அனலாசுரன் வாயில் இருந்து நெருப்பை கக்கி பிள்ளையாரின் படைகளை அழித்தான். இதைக்கண்ட விநாயகப்பெருமான் அனலாசுரனை தூக்கி அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள்போன அனலாசுரன்  வெப்பமடைய செய்தான். விநாயகர் வயிறு எரிகிறதே என்று அங்கும், இங்கும் ஓடினார்.
 
அதைக்கண்ட தேவர்கள் குடம், குட மாகக் கங்கை நீரினால் அவருக்கு அபிஷேகம் செய்தனர். ஆனால் எரிச்சல் குறையவில்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர்,  வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது.
 
அனலாசுரன் பிள்ளையாரின் வயிற்றிலேயே ஜீரணம் ஆகி விட்டான். மனம் மகிழ்ந்த விநாயகர் என் அருள் வேண்டுபவர்கள் அருகம் புல்லினால் என்னை அர்ச்சனை  செய்ய வேண்டும் என்று கூறினார். அன்று முதல் பிள்ளையாருக்கு அருகம் புல் அர்ச்சனை செய்யும் வழக்கம் ஏற்பட்டது.