ஷிர்டி சாய் பாபா!
|
மராட்டிய மாநிலம் ஷிர்டியில் தோன்றி தனது வாழ்நாளை அங்கேயே கழித்து சமாதியடைந்த சாய் பாபா, தன்னைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கியது மட்டுமின்றி, அவர்கள் மனதில் அன்பை விதைத்து, எப்பொழுதெல்லாம் அவர்கள் நாடுகின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களின் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் நிலவச் செய்தார்.
19 ஆம் நூற்றாண்டில் பிறந்து 1918ல் சமாதியடைந்த பாபா, தனது பிறப்பின் நோக்கமே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஆசி வழங்குவதே என்று கூறியுள்ளார். தன்னை நாடி வந்த நோயாளிகளை ஆசிர்வதித்து அவர்களை குணப்படுத்தினார். பலரின் உயிரைக் காத்தார். விபத்துகளை தவிர்த்தார். பிள்ளைப் பேறு வேண்டியவர்களுக்கு அப்பேற்றை வழங்கினார். ஏழ்மையில் வாடியவர்களுக்கு நல்வாழ்வை அளித்தார். மனிதர்களை அமைதிப்படுத்தியது மட்டுமின்றி, மற்றவர்களோடு இசைந்து வாழவும் உதவினார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னிடம் அடைக்கலமான பக்தர்களை அந்த உன்னதமான ஆன்மீக பரிணாம வளர்ச்சிக்கும், திருவுருமாற்றத்திற்கும் வழிகாட்டினார்.
|
|
1998-99 ஆம் ஆண்டுகளில் புனருத்தாரணம் செய்யப்பட்ட சாய் பாபா கோயிலில் இப்போது அவரை தரிசிப்பதற்கு என்று தனிப்பாதை, பக்தர்களுக்கு உணவளிக்க சாப்பாட்டுக் கூடம், நன்கொடை அளிக்கவும், பிரசாதம் வழங்கவும், ரயில் பயணச் சீட்டை முன் பதிவு செய்யவும், பாபாவின் அருளாசிகளை விளக்கும் புத்தகங்கள் விற்கும் கடையும், சிற்றுண்டி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இவை யாவற்றையும் சாய் பாபா சன்ஸ்தான் செய்து வருகிறது.
ஷிர்டிக்குச் செல்வது எப்படி?
சாலை மார்க்கமாக : மும்பையில் இருந்து 161 கி.மீ., புனேயில் இருந்து 100 கி.மீ., ஹைதராபாத்தில் இருந்து 360 கி.மீ., மான்மாடில் இருந்து 29 கி.மீ., ஒளரங்காபாத்தில் இருந்து 66 கி.மீ., போபாலில் இருந்து 277 கி.மீ., பரோடாவில் இருந்து 202 கி.மீ. தூரத்தில் உள்ள ஷிர்டிக்கு எல்லா நாட்களிலும் பேருந்து வசதி உண்டு.
ரயில் மார்க்கமாகச் செல்வோர், ஷிர்டிக்கு அருகில் உள்ள மான்மாட் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.
விமானம் மார்க்கமாகச் செல்வோர் மும்பை அல்லது புனேயில் இறங்கிச் செல்ல வேண்டும்.
