கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் செளபர்நிகா நதிக்கரையில் அமைந்துள்ளது, சாஸ்திரத்தின்படி கட்டப்பட்டு, கட்டடக் கலையின் அழகம்சத்துடன் கூடிய தாய் மூகாம்பிகை திருக்கோயில். கர்நாடகம் மட்டுமின்றி, நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தாய் மூகாம்பிகையின் சக்தியை உணர்ந்து பல்லாயிரக்கணக்கில் வந்து செல்கி்ன்றனர்.
விஜயதசமி இத்திருக்கோயிலில் வித்யாதசமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தங்களுடைய குழந்தையின் கல்வியை இத்திருத்தலத்திற்கு வந்து தாய் மூகாம்பிகையை வணங்கியே துவக்கி வைக்கின்றனர். அதனால்தான் விஜயதசமி, வித்யாதசமி என்றழைக்கப்படுகிறது.
தல வரலாறு!
கோல மகரிஷி எனும் ரிஷி இங்கு தவமிருந்து அருள் பெற்றதனால் இவ்விடத்திற்கு கொல்லூர் என்றும், கோலபுரா என்றும் அழைக்கப்படுகிறது. காமா அசுரனை ஒடுக்குவதற்காக மகாலஷ்மியின் அருளை வேண்டி கோல மகரிஷி இங்குதான் கடும் தவம் புரிந்தார். அவரின் தவத்தை ஏற்ற மகாலஷ்மி, சிவனின் அருளை வேண்டி தவமிருந்து அமரத்துவம் பெறயிருந்த நிலையில் அவனை தேவி ஊமையாக்கினார். அதன்பிறகு அந்த அசுரன் மூக்காசுரன் (ஊமை அரக்கன்) என்றழைக்கப்பட்டான். ஆனால் அதற்குப் பிறகும் அந்த அசுரன் அடங்கவில்லை. சிவனிடமும், ஹரியிடமும் சாகா வரம் பெற்ற அவனை தேவி தனது படையுடன் வந்து கொண்டார்.
இத்திருத்தலத்தின் மூலஸ்தானத்தில் உள்ள ஜோதிர் லிங்க வடிவத்திலேயேதான் தாய் மூகாம்பிகை வணங்கப்படுகிறார். தண்ணீரில் அமர்ந்தவாறு இருக்கும் பீடத்தில் தங்கத்தால் ஆன கோடுடன் ஜோதிர் லிங்கம் உள்ளது. பிரம்மனும், விஷ்ணுவும், மகேஸ்வரனும் எவ்வாறு ஸ்ரீ சக்கரத்தினால் வழிபடப்படுகின்றனரோ, அதுபோலவே ஜோதிர் லிங்கத்தின் இந்த ஆதி சக்தி இங்கு வணங்கப்படுகிறார்.
இக்கோயிலின் கர்ப்ப கிரகத்தில் பிரகருதி, சக்தி, காளி, லஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் விக்ரகங்களும் உள்ளது. ஜோதிர் லிங்கத்தின் மேற்குத் திசையில் பஞ்ச லோகத்தினலான ஸ்ரீதேவியின் சிலை உள்ளது. இதுவே விழாக் காலங்களில் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். தாய் மூகாம்பிகை சங்குடனும், சக்கரத்துடனும் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.
|