ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (21:05 IST)

கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி! விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் அருகே கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு என்ற ஊராட்சி பகுதியில் எட்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சரவணன்,ராமமூர்த்தி  ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது சரவணன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் சமமாக அதாவது தலா 183 வாக்குகளை பெற்று இருந்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்வு செய்யலாம் என்று கூறி அதிகாரிகள் இருவரையும் அனுப்பி வைத்தனர்
 
இந்த நிலையில் இன்று காலை குலுக்கல் நடைபெற்று சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றி சான்றிதழும் கொடுக்கப்பட்டது. இதனையறிந்த ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னுடிய முன்னிலையில் குலுக்கல் நடத்தாமல் சரவணனை வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார் 
 
இதனை அடுத்து அவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னர் திடீரென மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு வந்து ராமமூர்த்தியை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து புகார் மனு எழுதிக் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து ராமமூர்த்தி புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கவுன்சிலர் பதவிக்கு போட்டி ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது