வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (10:11 IST)

குட்கா விவகாரம் ; பொங்கிய விஜயபாஸ்கர் : கையை பிசையும் முதல்வர்

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வதென்று தெரியாமல் கைகளை பிசைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் காவல்துறை உயரதிகாரிகளான தமிழ்நாடு டிஜிபி டிகே.ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ்,  உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நேற்று காலை வரை நீடித்த இந்த சோதனையில் பல ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  இந்த விவகாரத்தில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
இந்த விவகாரம் தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிஜிபி ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யது நல்லது. இல்லையேல் சிபிஐ சோதனை தொடரும் என அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விஜயபாஸ்கர் ராஜினாமாவை ஓ.பி.எஸ் தரப்பும் விரும்புவதாக தெரிகிறது.

 
இதை தெரிந்து கொண்ட விஜயபாஸ்கர் நேற்று மாலை முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ‘ நான் ராஜினாமா செய்ய வேண்டும் என சில அமைச்சர்கள் நினைக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின் போது பணம் பட்டு வாடா செய்ததாக எழுந்த புகாரில் அனைத்து அமைச்சர்களின் பெயரும் இருக்கிறது. எல்லோரும் ராஜினாமா செய்வார்களா?” என கேள்வி எழுப்பினாராம்.
 
மேலும், “உச்ச நீதிமன்றத்தில் எனக்கு தெரிந்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்திக் கொள்கிறேன். என்னை ராஜினாமா செய்ய சொன்னால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்” என சற்று எச்சரிக்கும் தொனியில் பேசியதாக தெரிகிறது.
 
அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த முதல்வர், இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.