வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (14:17 IST)

அழகிரிக்கு மறைமுக உதவி? : ஸ்டாலினுக்கு செக் வைக்கும் எடப்பாடி

மு.க.அழகிரிக்கு மறைமுகமாக உதவுவதன் மூலம் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து, அவரை அதிமுகவிற்கு எதிராக செயல்பட விடாமல் தடுக்கும் பணிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி முடுக்கி விட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
திமுக தலைவர் கருனாநிதியின் மறைவிற்கு பின், மீண்டும் தனது ஆட்டத்தை துவங்கியிருக்கிறார் அழகிரி. கடந்த 5 வருடங்களாக தன்னை திமுகவில் இருந்து ஒதுக்கி வைத்த கோபம் அவரின் பேட்டிகளில் தெரிகிறது. கருணாநிதியின் சமாதியில் ‘என் ஆதங்கத்தை கூற வந்தேன். அதுபற்றி விரைவில் வெளியிடுவேன்’ எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
ஆனால், அழகிரியை திமுகவில் இணைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. இது அழகிரிக்கும் புரிந்து விட்டது. எனவே, திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்தி ஸ்டாலினுக்கு தனது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.  அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள அழகிரியின் ஆதராவளர்களை அவரிடம் மறைமுகமாக கொண்டு சேர்ப்பதுதான் திட்டமாம். மாவட்ட நிர்வாகிகளுக்கு அழகிரியின் ஆதரவாளர்கள் யார், ஸ்டாலின் ஆதரவாளர்கள் யார் எனத் தெரியும். எனவே, அதைக் கண்டறிந்து அழகிரியிடம் அவர்களை கொண்டு சேர்க்கும் அசைன்மெண்ட் அவர்களுக்கு கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

 
இதன்மூலம் அழகிரியின் பலம் அதிகமாகும். அதனால், அவர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுப்பார். திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி பிளவை உண்டாக்குவார். அதை சரி செய்யவே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கும். இதனால், அதிமுக அரசை பற்றி விமர்சிப்பதை விட அழகிரியால் வரும் குடைச்சல்களை சரி செய்யவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும் என கணக்குப்போடுகிறாராம் பழனிச்சாமி. 

ஏனெனில், கலைஞர் கருணாநிதி இருந்தவரை அடக்கி வாசித்த ஸ்டாலின், இனிமேலும் அப்படி இருப்பார் என எடப்பாடி நம்பவில்லை. மேலும், மெரினாவில் இடம் கொடுக்காத விவகாரத்தில் கண்டிப்பாக ஸ்டாலின் கோபமாக இருப்பார். எனவே, இனிமேல், அதிமுகவிற்கு எதிரான அவரின் நடவடிக்கைகள் கண்டிப்பாக தீவிரமாக இருக்கும் என நம்புகிறார் எடப்பாடி. அதை தடுக்கவே அழகிரி மூலம் அவருக்கு குடைச்சலை கொடுக்கும் முயற்சியை அவர் கையில் எடுத்திருக்கிறார் எனக்கூறப்படுகிறது.
 
நேரிடையாக இதை செய்ய முடியாது  என்பதால் இந்த ஆபரேஷன் மறைமுகவே நடக்க  வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டுள்ளாராம். இதுபற்றி உளவு துறைக்கும் உத்தரவு போயிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.