ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (13:33 IST)

அரியர் தேர்வு விவகாரம்: விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை!

அரியர்கள் வைத்த மாணவர்கள் ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவிக்க, இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யூஜிசி மற்றும் ஏஐசிடிஇ தெரிவித்ததாக அண்ணா பல்கலை துணை வேந்தர் கூறியிருப்பதால் அரியர் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
 
அரியர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு உறுதியான முடிவை அறிவிக்க வேண்டும். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும். தமிழகத்தில்  கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் இருந்து மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருப்பதாக  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருக்கிறார்.  
 
அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியிருக்கிறார். அந்த உறுதியுடன் அரியர் தேர்வுகளை உடடினயாக ரத்து செய்து ஆணை வெளியிட வேண்டும்‍. இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக உயர் கல்வித்துறைக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது மாணவர்களிடையே குழப்பதை உண்டாக்கியுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொறியியல் அரியர் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பதை போக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.