புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (12:24 IST)

எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா?

ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து மன்னிப்பு கேட்டபின்னரும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஓவ்வொருவராக கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
 
தற்போது வைரமுத்துவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவிஞர் வைரமுத்து ஒரு நாளேட்டில் ஆண்டாளின் பாடல்கள் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்து ஒன்றை மேற்கோள்காட்டியிருந்தார். ஆனால் அந்த கருத்தை அவர் வழிமொழிவதாக அக்கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.
 
அந்த கட்டுரையை சாக்காக வைத்துக்கொண்டு ஆண்டாளை அவதூறு செய்துவிட்டார் என கவிஞர் வைரமுத்துவின் மீது எச்.ராஜா பழிபோட்டு அநாகரிகமாக பேசிவருகிறார். எச்.ராஜாவின் பேச்சு சாதி - மதவெறியை கொண்டதாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பொது அமைதியைக் குலைக்கும் விதத்திலும் உள்ளது.  இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
ஏற்கனவே  தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி பேசிப் பதற்றத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரி இயக்கங்களை அவதூறு செய்தார். நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தகராறு செய்தார். தற்போது கவிஞர் வைரமுத்துவும், அவரது கட்டுரையை வெளியிட்ட நாளேடும் வருத்தம் தெரிவித்த பின்னரும் அநாகரிகமான வார்த்தைகளில் அவதூறு செய்துள்ளார்.
 
என்னையும் எமது கட்சியையும் இதே போல அவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததையும் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதையும் நாடறியும்.
 
எச்.ராஜா தந்தை பெரியாரை இழிவுப்படுத்தியபோது மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இடதுசாரிகளை இழிவு செய்தபோது ஏனையோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகளை வம்புக்கு இழுத்தபோது ஓரிருவரைத்தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் மவுனம் காத்தனர். அரசும் வேடிக்கை பார்த்தது. அதனால் தான் மேலும் மேலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவர் பேசிவருகிறார்.
 
எச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
 
இத்தகைய வெறுப்புப் பேச்சையும் பயங்கரவாதச் செயலாகவே கருத வேண்டும் எனவே தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசி வரும் எச்.ராஜாவை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது என கூறியுள்ளார்.