செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (13:07 IST)

கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்” -முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

stalin
மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்”  கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் த மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,'' மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதோடு, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது என்றும், மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரவரம்பிற்கு உட்பட்டது என்றும், இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில்
புள்ளிவிவரங்களுடன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
 
முதலாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடர்ந்து 15 விழுக்காடு வளர்ச்சியை அடைந்த போதிலும், 2023-2024 ஆம் ஆண்டில் நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளர்ச்சியை வெறும் 8 விழுக்காடாக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது என்றும், இதனால், நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இரண்டாவதாக, மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளின்படி, மாநில மின் விநியோக நிறுவனங்களின் (DISCOMs) மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையால், நடப்பாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது என்றும், இது இந்த ஆண்டு மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்றும், எதிர்காலத்திலும் மாநிலங்களை பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
மூன்றாவதாக, ஒன்றிய அரசின் திட்டமான, சென்னை மெட்ரோ இரயில் 2 ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், இத்திட்டத்திற்கான மொத்த கடனான 33,594 கோடி ரூபாய் முழுவதும், மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சிகடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில், இத்தகைய பாரபட்சமான மற்றும்அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சரக்குகள் மற்றும்
சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது என்றும், இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களின் கொள்கை முன்னுரிமைகளின்படி வளங்களைத் திரட்டுவதற்கும், முக்கியமான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் உள்ள திறனை முடக்குவதையே ஒன்றிய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
cm stalin, pm modi
நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது என்றும், இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டுமென்று தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.