தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு- உதயநிதி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது.
ஜெய்கா என்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான டெண்டர் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இதுபற்றி அமைச்சர் உதய நிதி தன் சமூக வலைதள பக்கத்தில்,
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.