1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (10:21 IST)

மானிய ஸ்கூட்டர் - கால அவகாசம் நீட்டிப்பு

தமிழக அரசு வழங்கும் மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 
இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். இத்திட்டத்தில் பெண்களுக்கு இருச்சக்கர வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 
 
அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்காக ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிகப்பட்டு வந்தன. நேற்று கடைசி தினம் என்பதால், ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை வழங்கினர். 
 
சென்னையில் கடந்த 2-ந் தேதி வரை 6,187 பெண்களும். இறுதி நாளான நேற்று 16,773 பெண்களும் அம்மா ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 22,960 பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்து உள்ளனர். 
 
விண்ணப்பங்கள் மீதான ஆய்வுப்பணி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் பணி 15-ந் தேதி நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு வரும் 24-ந் தேதியான ஜெயலலிதா பிறந்த நாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், கடைசி நாளான நேற்று கூட்டம் அலை மோதியதால், பல பெண்களால் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
 
அதை கருத்திக் கொண்டு மானிய ஸ்கூட்டர் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 10ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முடிந்துவிட்ட நிலையில், தற்போது இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.