வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (16:33 IST)

மக்கள் தலையில் வரலாறு காணாத கடனை சுமத்தியுள்ள அதிமுக அரசு – ஸ்டாலின் விமர்சனம்

"தமிழக மக்கள் தலையில் வரலாறு காணாத கடனை சுமத்தியுள்ள அதிமுக அரசு - மாநில நிதிப்பகிர்விலும் உரிமையை இழந்திருக்கிறது என தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  “பேரிடர்களில் கட்சி அரசியல் செய்வதே எமக்குப் பெருமை(!)” என்று, பாதி மனசாட்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமியின் கீழ் நிதி அமைச்சராக இருக்கும் திரு. ஓ.பன்னீர்செல்வம், மத்திய பா.ஜ.க. மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும், "15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை” கெட்டியான திரைபோட்டு மறைப்பதற்காக, என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழகத்தின் நிதித் தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட முடியாமல், பட்டப்பகலில் பறிகொடுத்துவிட்டு, அதனால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை மறைக்க - சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே மறந்து விட்டு - அல்லது எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று மனப்பால் குடித்து, ஒரு நிதி அமைச்சர், கடைந்தெடுத்த ஒரு பொய் - புனைசுருட்டு அறிக்கை வெளியிடுவது மிகவும் அநாகரிகமாக இருக்கிறது.

“முதலமைச்சரின் முயற்சியால்தான் தமிழ்நாட்டிற்கு 32,849 கோடி ரூபாய் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது” என்று, “மனசாட்சியை” அடகு வைத்து விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், 14.2.2020 அன்று 2020-21-ஆம் ஆண்டிற்காக, தான் படித்த நிதிநிலை அறிக்கையையே மறந்துவிட்டாரே, மாய்மாலம் செய்கிறாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலிடுகிறது.

உரிய நிதிப் பகிர்வைப் பெற்று விட்டது தமிழகம் என்றால், 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில், “சரியான கணக்கீடுகள் மூலம்,போதிய நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்; இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பா.ஜ.க.,வின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன்! என அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.