கருணாநிதிக்கு விரைவில் பேச்சு பயிற்சி - திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி
திமுக தலைவர் கருணாநிதிக்கு விரைவில் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் நலக்குறைபாடு மற்றும் முதுமை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சளி தொள்ளை காரணமாக அவரது குரல் வளையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அவரால் பேச முடியவில்லை.
அந்நிலையில்தான் சமீபத்தில் அவர் திடீரென முரசொலி அலுவலக்திற்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார். அதன் மூலம் அவருக்கு பழைய நினைவுகள் திரும்பியுள்ளன எனக் கூறப்படுகிறது. அவர் முகமலர்ச்சியுடன் புகைப்படங்களை பார்த்தது அதை உறுதி செய்துள்ளது. அங்கிருந்தவைகளை மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக விளக்க, கருணாநிதி அதை புரிந்து கொண்டு புன்னகைத்தவாறே இருந்தார்.
சுமார் ஒரு ஆண்டுக்கு பின்னர் கருணாநிதி முரசொலி அலுலகத்திற்கு வந்துள்ள செய்தி அறிந்த திமுகவினர் ஆயிரக்கணக்கில் முரசொலி அலுவலகம் முன் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்த கருணாநிதி, அங்கு கூடியிருந்தவர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து அவர் கோபாலபுரம் கிளம்பி சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் கோபால் “ கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மற்றொரு அதிசயத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” எனக் கூறினார்.
அதாவது கருணாநிதி விரைவில் பேசுவார் என்பதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். அவ்வப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை எடுத்து விட்டு அவருக்கு பேச்சி பயிற்சி கொடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த குழாய் முழுமையாக அகற்றப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
அதிக பட்சமாக இன்னும் 3 மாதத்தில் அவர் பழையபடி பேசுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே, குணம் அடைந்த பின், கட்சிக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி அவர் வழி நடத்துவார் என திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.