போலீசை தாக்கிய வக்கீல்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே காவலர் ஒருவரை தாக்கிய வழக்கறிஞர் உள்பட மூன்று பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த லிங்கேசன் என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களுடன் மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். போர் நினைவு சின்னம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்த லிங்கேசனை காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவரும், அவருடன் வந்தவர்களும் குடிபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் லிங்கேசன் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதில் லிங்கேசனுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிப்போய் ஒரு கட்டத்தில் லிங்கேசன் உள்பட மூன்று பேர் சேர்ந்து சதீஷ்குமார் என்ற காவலரை தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் சதீஷ்குமார் அருகே உள்ள அன்னை சத்யா நகருக்கு ஓடி சென்றுள்ளார். சதீஷ்குமார் சத்தமிட்டதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து சிலர் லிங்கேசன் உள்பட மூன்று பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அந்த வழியே வந்த ரோந்து போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி தாக்குதலில் காயமடைத்த சதீஷ்குமாரை ஸ்டான்லி மருத்துவமனையிலும், லிங்கேசன் உள்பட மூன்று பேரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லிங்கேசன் உள்பட மூன்று பேரும் அங்கு மருத்துவமனையிலும் தகராறு செய்துள்ளனர். அங்கு பணியில் இருந்த பிரபு என்ற பயிற்சி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பயிற்சி மருத்துவர் பிரபு மற்றும் காவலர் சதீஷ்குமார் ஆகியோர் லிங்கேசன் உள்பட மூன்று பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.