செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:07 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக கலந்துக்கொண்டார். 

 
இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டது. 
 
சித்திரைத் திருவிழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அதனையடுத்து வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. 
 
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சொக்கநாதர் கயிலாய வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன.
 
இதனைத் தொடர்ந்து நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதை தொடர்ந்து நித்யானந்தா உத்தரவின்படி ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.