திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (10:31 IST)

முக்கொம்பில் 9வது மதகும் உடைந்து விழுந்தது : விவசாயிகள் அதிர்ச்சி

முக்கொம்பு அணையில் 9வது மதகும் உடைந்து விழுந்ததால் திருச்சி பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களாக கேரளா மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் அணை நிரம்பியவுடன் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து கொண்டே வந்துள்ளது.
 
இந்த நிலையில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் அந்த அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் மொத்தமாக திறந்துவிடப்பட்டு வெளியேற்றப்பட்டும் வருகிறது.  வினாடிக்கு 53,700 கனாடி நீர் காவிரிக்கும், 23,400 கன அடி நீர் கொள்ளிடத்திற்கும் பிரித்து விடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் உடைந்து, மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. இதனால், அந்த பகுதியின் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர். 3 ஆணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்பும் பகுதியாக முக்கொம்பு செயல்படுகிறது.
 
கொள்ளிடம் அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளது. இதில் 8 மதகுகள் திடீரென வெள்ளத்தில் உடைந்த அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனையடுத்து கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 
இருப்பினும் மற்ற மதகுகள் வழியே வெளியேறும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் குறைத்துவிட்டதால் மதகுகள் உடைப்பால் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் உடைந்த மதகுகளை சரிபார்க்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் 9வது மதகும் உடைந்து விழுந்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுமோ என அந்த பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
முக்கொம்பு மேலணை 1836ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.