புகழேந்தி அ.ம.மு.கவை விட்டு வருவதுதான் நல்லது! – கூடாரத்தை கலைக்கும் நாஞ்சில் சம்பத்
அ.ம.மு.கவிலிருந்து ஒவ்வொரு நிர்வாகியாக ஒவ்வொரு பிரச்சினையால் பிரிந்து சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்போது புகழேந்தி பிரச்சினை தொடங்கியிருக்கிறது.
அ.ம.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதன் பொது செயலாளர் டி.டி.வி தினகரனை விமர்சித்து பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து புகழேந்தியும் அ.ம.மு.கவை விட்டு விலகி வேறு கட்சிகளில் சேர்ந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து அவர் தெளிவான முடிவுக்கு இன்னும் வரவில்லை. இதுபற்றி டிடிவி தினகரனும் விசாரித்து முடிவெடுப்பதாக சொல்லி நழுவி விட்டார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத் ”அமமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி. அங்கே நாகப்பாம்புகள்தான் குடியிருக்கின்றன. நல்லவர்களுக்கு அங்கே இடமில்லை. புகழேந்தி அங்கிருந்து வெளியே வருவதுதான் அவருக்கு நல்லது” என்று கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் வெற்றி மூலம் பெற்ற புகழை அ.ம.மு.க தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. புதுச்சேரிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்தப்போது அவர்களுக்கு ஒத்துழைக்க முடியாது என கூறி 40க்கும் மேற்பட்ட அ.ம.மு.கவினர் கட்சியிலிருந்து விலகினர். தற்போது அ.ம.முக பலம் இழந்து வருவதற்கு தினகரன் தொண்டர்களின் எண்ணவோட்டத்தை அறியாதிருப்பதும், நிர்வாகிகளை கலந்தாலோசிக்காமல் தானே முடிவெடுப்பதும்தான் காரணம் என்கிறார்கள் விபரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள்.