பொங்கலுக்கு முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – மக்கள் ஏமாற்றம்
பொங்கலுக்கு பேருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல், தீபாவளி நாட்களில் வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக வருடா வருடம் சிறப்பு பேருந்துகள் முதலியவை இயக்கப்படுகின்றன. முன்னர் பொங்கலுக்கு ஒரு மாத காலம் முன்னர் முன்பதிவுகளை தொடங்குவது வழக்கமாக இருந்தது. தற்போது நாளுக்கு நாள் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்படி ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. எழும்பூர், செண்ட்ரல் நிலையங்களில் மக்கள் காத்திருந்து முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று காலியானது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதேபோல் ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட்டுகளை செப்டம்பர் 13,14,15 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யலாம். மேலும் தனியார் பேருந்துகளும் இப்போதிருந்தே பொங்கல் டிக்கெட்டுகளின் முன்பதிவை தொடங்கி உள்ளனர்.
இன்னும் சில வாரங்களில் தமிழக அரசும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.