திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (18:27 IST)

ஜீயர் அயோக்கியத்தனமான காரியத்தில் ஈடுபடுகிறார்: நாஞ்சில் சம்பத் காட்டம்!

ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது.
 
இதனையடுத்து வைரமுத்து தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜம் பிடிவாதமாக தனது இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
 
இந்நிலையில் ஜீயரின் செயலை விமர்சித்து நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், வகுப்புவாத சக்திகள் வீசிய வலையில் விழுந்துகிடக்கும் மதிப்பிற்குரிய ஜீயர். தன்னை இப்படி வெளிக்காட்டிக் கொள்வதன் மூலம், ஜீயர் தன்னுடைய வைணவ சம்பிரதாயத்தையே குழித்தோண்டி புதைத்துவிட்டார்.
 
வைணவ சம்பிரதாயப்படி ஒரு வைணவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் உப்பைப்போல் இருப்பான் என்பார்கள். உப்பில்லாமல் ஒரு உணவை நாம் உண்ண முடியாது. ஆனால் உப்பு உணவில் தனியாக தெரிவதில்லை. அது மறைந்துதான் இருக்கும்.
 
அதைப்போல் ஒரு வைணவன், ஒரு நல்ல காரியம் செய்தால் அதனைத் தான் செய்ததாக காட்டிக்கொள்ள விரும்பமாட்டான். ஆனால் ஒரு அயோக்கியத்தனமான ஒரு காரியத்தில் ஒரு வைணவர், ஒரு ஜீயர் ஈடுபடுவது தமிழ்நாட்டிற்கு புதிது என காட்டமாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.