இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை… வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது!
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரின் மகளுக்கு ஆன்லைன் வகுப்புக்காக புதிதாக செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
கொரோனா காரணமாக பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடந்து வருவதால் கோவையைச் சேர்ந்த அந்த மாணவிக்கு தங்கள் பெற்றோர் புதிய ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். அப்போது மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்ரீநாத் என்ற 23 வயது இளைஞர் பழக்கமாகியுள்ளார். பின்னர் இருவரும் பழகி நெருக்கமாகி செல்போன் எண்ணை மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை காதல் வார்த்தைகள் பேசி மயக்கியுள்ளார் ஸ்ரீநாத். இதையடுத்து அவரை தனியாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோக்களை வெளியே விட்டுவிடுவேன் என்று மிரட்டி நகைகளை கேட்டு மிரட்டியுள்ளார். சிறுமியும் சிறுக சிறுக 60 பவுன் வரை வீட்டு நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நகைகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க உண்மையை சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஸ்ரீநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.