விலை உயர்ந்த வெங்காயம்; எடுடா தம்பி அந்த முட்டைக்கோஸை..! – ஹோட்டல் சங்கம் முடிவு!
வட இந்தியாவிலிருந்து வெங்காய வரத்து குறைந்துள்ள நிலையில் அதற்கு மாற்றாக முட்டைக்கோஸை உபயோகப்படுத்த மதுரை ஹோட்டல் சங்கம் முடிவெடுத்துள்ளது.
வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் ஹோட்டல்களில் பெரும்பாலான வெங்காய உணவுகளுக்கு பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. இதுகுறித்து கலந்தாலோசனை மேற்கொண்டுள்ள மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உணவு பொருட்களின் விலை வெங்காய விலையால் உயர்வதை தடுக்க வெங்காயத்திற்கு பதிலாக முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய் பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி தயிர் பச்சடிகளில் வெங்காயத்துடன் பாதிக்கு பாதி வெள்ளரிக்காயும், மற்ற வெங்காயம் சேர்க்கும் உணவுகளில் வெங்காயத்துக்கு சமமாக முட்டைக்கோஸையும் சேர்க்க முடிவெடுத்துள்ளனர். மதுரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே பல ஹோட்டல்களில் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விலையை அதிகரிக்காமல் உணவு வழங்க இந்த ஒருவழி மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் வெங்காயம் விலை குறைந்ததும் பழைய படியே வெங்காயம் உணவில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.