புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (09:00 IST)

கொரோனாவும் வரக்கூடாது; வியாபாரமும் பாதிக்க கூடாது! – கோயம்பேடு வியாபாரிகள் அதிரடி முடிவு!

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் புதிய முடிவை எடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறியதால் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் மார்க்கெட் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனினும் மொத்த வியாபார கடைகளில் சில்லரை வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகிறார். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மொத்த வியாபார கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க அனுமதியில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகமானோர் பொருட்களை வாங்க வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடுமோ என வியாபாரிகள் இடையே பீதி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்திய கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமைகளை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை விட முடிவெடுத்துள்ளனர். இதன்மூலம் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்பதோடு, கொரோனா பரவலும் கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.