1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (16:45 IST)

2ஜி வழக்கின் தீர்ப்பு ; அநீதி வீழும் அறம் வெல்லும் ; கருணாநிதி கருத்து?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

 
குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். 
 
இந்த தீர்ப்பை வரவேற்று மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதேபோல், திமுகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல், திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இந்த தகவலை பேராசிரியர் அன்பழகன்  மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது, அவர் மகிழ்ச்சியடைந்து தன்னுடைய கரங்களை பிடித்துக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
மேலும், அநீதி வீழும் அறம் வெல்லும் என கருணாநிதி கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் தற்போது பேசமுடியாத உடல் நிலையில் இருக்கிறார். எனவே, அவர் எப்படி இப்படி கருத்து தெரிவித்திருப்பார் என்ற சந்தேகம் எழுந்தது. 
 
இந்நிலையில், அவர் அப்படி எழுதி காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை திமுகவினர் பலரும் சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.