புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (18:05 IST)

ஜெ. மரண விசாரணை: சசியை நெருக்கும் விசாரணை ஆணையம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பியிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் குறித்தான நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது.
 
இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது அரசு. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியவர்களிடமும், ஜெயலலிதா தொடர்புடையவர்களிடமும் தனது விசாரணையை நடத்தி வருகிறது.
 
இதனையடுத்தும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சசிகலா 15 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் மெயிலில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது.
 
இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்தார் சசிகலா. மேலும் அந்த விவரங்கள் கிடைத்த 15 நாட்கள் கழித்து பதில் தர தான் தயாராக இருப்பதாகவும் சசிகலா கூறியுள்ளார்.
 
இந்நிலையில் விசாரணை ஆணையமும் சசிகலா எழுப்பிய கேள்விக்கு பதில் தர முன்வந்துள்ளதால் விரைவில் சசிகலாவிடம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.