1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (11:24 IST)

எடப்பாடிக்கு தேர்தலில் வேலை இல்லை? ஓபிஎஸ்க்கே வெற்றி கிடைக்கும்! -உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உறுதி!

MLA Ayyappan
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 73வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.


 
முன்னதாக  எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து கோவில் திருவாச்சி மண்டபத்தில் தங்கத்தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளிய நிலையில் எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜ்மோகன் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அரோகரா கோசம் முழங்கியும், ஓபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்தும் தேரை இழுத்துச் சென்றனர்.

தேர் நிலைக்கு வந்த பின்பு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு எம்எல்ஏ அய்யப்பன் பிரசாதம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யப்பன் கூறுகையில்:

ஓபிஎஸ் நீடூழி வாழவும், 2024 நாடாளுமன்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வெற்றி பெற வேண்டியும் வழிபாடு நடத்தினோம்.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தலைமையில் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு:

கடந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அது நிரந்தரம் அல்ல விரைவில் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டு ஓபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

 
திமுக எம்பி ஆ ராசா எம்ஜிஆர் குறித்து பேசியது குறித்த கேள்விக்கு:

எம்ஜிஆரை பற்றி பேச ராசாவுக்கு தகுதியில்லை. அவரைப் பற்றி பேசி நாம் தரம் தாழ்ந்து விடக்கூடாது. ஏனென்றால் அது ஒரு லூசு.

தொடர்ந்து ஓபிஎஸ் ன் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு:

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்து எட்டு தோல்விகளை சந்தித்தார். அது போல தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்  மறுபடியும் தர்மமே வெல்லும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெற்றியை தேடி தரும் என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு:

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் க்கும்  சசிகலாவிற்கும் மிகப்பெரிய துரோகம் செய்த எடப்பாடி சசிகலா காலை பிடித்து முதல்வராகி விட்டு இன்று சசிகலாவை சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறது என்கிறார். இப்படிப்பட்ட துரோகி எடப்பாடி பழனிச்சாமி தவிர யார் வந்தாலும் எங்களுடன் சேர்த்துக் கொள்வோம் என்றார்.

வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் என்ன கோரிக்கை எழுப்புவீர்கள் என்ற கேள்விக்கு:

திமுக தேர்தல் வாக்குறுதிகளாக 525 வாக்குறுதி  கொடுத்தது ஆனால் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் கொடுத்தோம். ஆனால் இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் மக்களிடம் எதிர்ப்பை சந்தித்துள்ளார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது என்ற சம்பவங்கள் நடக்கும் இதற்கு அண்மையில் பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டதே உதாரணம்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் இந்த நிலையில் ஓபிஎஸ் யாருடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்ற கேள்விக்கு:

எடப்பாடி பழனிச்சாமி கல்லாவிரித்து உட்கார்ந்து இருக்கிறார். கல்லாகட்ட யாரும் வரவில்லை அதனால் எடப்பாடிக்கு தேர்தலில் வேலை இல்லை ஓபிஎஸ்-க்கு வெற்றி கிடைக்கும் என்றார்.

Updated by Prasanth.K