செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (17:35 IST)

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி மறுப்பு..! உயர்நீதிமன்றம் அதிரடி..!

Press Stickers
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால  அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு நீதிபதி கலைமதி முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  முகிலன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என கூறினார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் ஸ்டிக்கர் பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.