திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:48 IST)

விஷாலுக்கு கடும் எதிர்ப்பு : உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினார் சேரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்கு நடிகரும், இயக்குனருமான சேரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


 
ஏற்கனவே நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளார்.  இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. 
 
விஷாலின் நடவடிக்கை விஷால் தனது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இறங்கட்டும். இல்லையேல், தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உள்ளிருப்புப் போரட்டம் நடத்துவேன் என தன் டிவிட்டர் பக்கத்தில் சேரன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்நிலையில், விஷால் இன்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
 
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சிலருடன் இன்று சங்கத்திற்கு வந்த சேரன், செய்தியாளர்கள் முன்னிலையில் தான் உள்ளிருப்பு போரட்டத்தை நடத்தபோவதாக அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி என்பது பொதுவானது, அரசியல் சார்பு இல்லாதது. அரசாங்கம் சார்ந்து இயங்குவது. அப்படியிருக்க, விஷால் அரசியலில் ஈடுபட்டால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக அரசு திரும்பும். 8 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் 146 சிறு தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் வழங்கியுள்ளது. விஷாலின் நடவடிக்கையால், மானியத்தை அரசு நிறுத்திவிட்டால் தயாரிப்பாளர் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். 



அதேபோல், தற்போது அரசு கேளிக்கை வரியை குறைத்துள்ளது. விஷாலின் நடவடிக்கையால், வரியை மீண்டும் அரசு அதிகரித்துவிட்டால் தயாரிப்பாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இது பற்றி எந்த அக்கறையும் விஷாலுக்கு  இல்லை. அவரின் நடவடிக்கையால் அசோக்குமார் போல் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
 
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், எந்த நல்லதும் நடக்கவில்லை. அவர் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர் பேசுவது அனைத்தும் பொய்.
 
அவர் வெற்று விளம்பரத்திற்காகவும், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதற்காகவுமே எப்போதும் செயல்படுகிறார். தயாரிப்பாள் சங்க தலைவரை ராஜினாமா செய்து விட்டு அவர் அரசியலில் ஈடுபடட்டும். அல்லது வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிட்டு அவர் சங்க தலைவர் பதவியில் நீடிக்கட்டும். அதுவரை நான் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவேன்” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.