வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (14:49 IST)

சென்னையில் உள்ள மேம்பாலங்கள் மூடல்! – மாநகர காவல் அறிவிப்பு!

சென்னையில் புத்தாண்டை பொதுவெளியில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேம்பாலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் இந்த ஆண்டு முடிவடையும் நிலையில் புத்தாண்டை வழக்கமாக சென்னை மக்கள் மெரினா கடற்கரை போன்ற இடங்களில் கூட்டமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் நட்சத்திர விடுதி பார்களை இன்று இரவு 10 மணிக்கு மூட சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகள் உள்ளிட்டவை தடுப்புகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் புத்தாண்டிற்கு கடற்கரைக்கு வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள 75 மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் சென்னை மாநகரக்காவல்துறை தெரிவித்துள்ளது.